தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் லப்பர் பந்து. அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று தற்போது வரை திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.


லப்பர் பந்து இயக்குனர்:


இந்த படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, “ நான் ஒரு சிவில் இன்ஜினியர். அப்பா கொத்தானார் என்பதால் என்னை சிவில் இன்ஜினியர் ஆக்கிட்டாரு. எங்கப்பாவுக்கு கனவு இருந்துச்சு. ஆனா எனக்கு ஒன்னுமே இல்ல. சரி யாரோ ஒரு ஆளு கனவு காண்றாங்க. அதுக்காக நான் என்ஜினியர் ஆகிட்டேன்.


அப்போ எனக்கு 24 வயசு. நான் சைட்டுக்கு போன என்னை மதிக்குறாங்க. எனக்காக காத்திருக்காங்க. ஆனா ஏதோ ஒன்னு மிஸ் ஆகிட்டே இருந்துச்சு. எல்லாமே இருக்கு. ஆனா ஏதோ மிஸ்ஸிங். அப்போ தெரிந்தது சினிமாதான் போல.


சினிமாவுக்கு வர முடிவு:


நான் எங்கப்பாகிட்ட அவ்வளவு பேச மாட்டேன். எங்கப்பாகிட்ட பேசுனதை நாலு பக்கத்துல எழுதிடலாம். அதுல அப்பா, அப்பா அப்படிங்குறதை எடுத்தா 2 பக்கம்தான் இருக்கும். பேனா வேணும்னா கூட அம்மா வழியாதான் வரும். இது பெரிய முடிவு. எங்கம்மாகிட்டதான் பர்ஸ்ட் போனேன்.


எங்கப்பா வேலைக்கு போயிருந்தாரு. எங்கம்மா காய் அரிஞ்சுட்டு இருந்தாங்க. எங்கம்மாகிட்ட நான் சினிமாவுக்கு போனும்னு சொன்னேன். எங்கம்மா வாசலைப் பாத்துட்டு அப்பா வர்றதுக்குள்ள போயிட்டு வந்துடுனு சொன்னாங்க.

அம்மா தந்த தக்லைஃப்:


நான் சினிமா பாக்கப் போல. சினிமா எடுக்கப்போறேனு சொன்னேன். எங்கம்மா போடா பைத்தியக்காரானு சமைக்கப் போயிட்டாங்க. நான் சொல்லிகிட்டே இருந்தேன் அவங்க சமைக்கப் போயிட்டாங்க. நீ படிச்சா மட்டும் போதுமா? உன் தம்பியை யார் படிக்க வைப்பா?னு கேட்டாங்க. உங்கப்பாகிட்ட சொல்லிக்கோனு சொல்லிட்டாங்க.


சொல்லிதான் ஆகனும். உடனே சொல்லல. 6 மாசம் ஆகிடுச்சு. தைரியம் வர. அவரு சைக்கிள் கழுவிட்டு இருந்தாரு. நான் நின்னுகிட்டே இருந்தேன். அவரு புரிஞ்சுகிட்டாரு. சினிமாவுக்கு போறேனு சொன்னேன். அவரு எங்கம்மாவை பாத்தாரு. சினிமா பாக்க இல்ல எடுக்கப் போறானு அவங்க சொன்னாங்க.

அப்பா போட்ட கண்டிஷன்:


எங்கப்பா எதுவுமே சொல்லல. எங்கம்மா மூலமா ஏதும் பதில் வரும்போலனு இருந்தேன். அதுக்காக வெயிட் பண்றேன். அப்புறம் வந்து கேட்டாரு நிஜமாவுமா? என்றார். கிரிக்கெட்லயும், சினிமாவுலயும் ரொம்ப அப்நார்மல் நான். அது அவருக்கு தெரிஞ்சுருக்கு போல. போனுமா? என்றார்.


தம்பிக்கு என்ன பண்ணலாம்?னு கேட்டாரு. நான் என் கம்பெனியிலே ஜாயின் பண்ணிட்டு போயிட்றேனு சொன்னேன். அவனும் சிவில் என்ஜினியர். எங்கப்பா கனவை யாராவது ஒரு ஆளாவது காப்பாத்தனும்ல. ஒரே ஒரு கண்டிஷன் போட்டாரு. வீட்ல இருந்து ஒரு ரூபாய் நீ வாங்கக்கூடாது. உன்கிட்ட இருந்து ஒரு ரூபாய் நான் வாங்க மாட்டேன் என்றார். அவங்க கேள்விபட்டது 15 வருஷம் இருந்திருக்காங்க. ரோட்லயே செத்து கெடுப்பாங்க. கஷ்டப்படுவாங்க என்பதுதான். நான் வந்துட்டேன். 8 வருஷம் கழிச்சு படம் பண்ணிட்டேன்.”


இவ்வாறு அவர் கூறினார்.