மணிகண்டன்


ஜெய் பீம் படத்தின் மூலம் பரவலாக அறியப்பட்டவர் நடிகர் மணிகண்டன். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'குட் நைட்' படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாக கூட்டணியில் இந்த ஆண்டு லவ்வர் படத்தில் நடித்தார். 2024ஆம் ஆண்டு இதுவரை வெளியான படங்களில் ரசிகர்களை லவ்வர் படம் அதிக ரசிகர்களைக் கவர்ந்து விவாதப் பொருளாகவும் மாறியது.


திரையரங்கில் 50 நாட்களை இப்படம் கடந்த நிலையில், தற்போது ஓடிடியில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் முன்னதாக லவ்வர் படத்தைத் தொடர்ந்து மணிகண்டன் நடிக்கும் அடுத்தப் படத்தின் அப்டேட் வெளியானது.


ஹாட்ரிக் வெற்றியை நோக்கி மணிகண்டன்






அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர்  காளிசாமி இயக்கத்தில் சினிமாக்காரன் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எஸ்.வினோத்குமார் தயாரிப்பில், நடிகர் மணிகண்டன் நாயகனாக நடித்திருக்கும்  பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தில் சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன், பிரசன்னா பாலச்சந்திரன், "ஜெய ஜெய ஜெய ஹே" புகழ் கனகம்மா, ஜென்சன் உள்ளிட்ட பல நடிகர்கள்  நடித்திருக்கின்றனர். 


தன்மானத்திற்காகவும், குடும்பத்தின் நலனுக்காகவும் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் எதிர்கொள்ளும் சவால்களே இந்தப் படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது. இந்தப் படம் குறித்து இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி பேசுகையில், “இந்தப் படம் ஃபேமிலி காமெடி டிராமாவாக உருவாகி இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கிய படத்தை இப்போது மார்ச் மாதம் முடித்திருக்கிறோம். இரண்டு ஷெட்யூலாக 65 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இத்திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் மார்க்கெட், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் என லைவ்வாக நிறைய இடங்களில் படமாக்கினோம்” எனக் கூறியுள்ளார்.


இக்கதை நம் குடும்பங்களில் நடக்கக்கூடிய நிகழ்வுகளின் அடிப்படையில் நகைச்சுவையும் சுவாரசியங்களும் நிறைந்ததாக அமைந்திருப்பதால் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப் படமாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.


படக்குழுவினர் பற்றிய தகவல்கள்


இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பிரசன்னா பாலச்சந்திரன் மற்றும் ராஜேஷ்வர் காளிசாமி இணைந்து எழுதியுள்ளார்கள். சினிமாக்காரன் நிறுவனம் சார்பாக செ. வினோத்குமார் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். சுஜித் சுப்ரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.


சுயாதீன இசைப்பாடல்களை வெளியிட்டு வந்த வைசாக் பாபுராஜ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். அஜித் நடித்த துணிவு படத்தில் ‘சில்லா சில்லா’ பாடலை வைசாக் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. கண்ணன் பாலு படத்தொகுப்பை கையாண்டுள்ளார் சுரேஷ் கல்லேரி கலை வடிவமைப்பும்  தினேஷ் சுப்புராயன் சண்டைப்பயிற்சியும் செய்திருக்கிறார்கள்.