தமிழ் சினிமாவில் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்ற ’லவ் டுடே’ படம் குறித்து பாலிவுட் நடிகர் பாலிவுட் நடிகர் வருண் தவான் வியந்து பேசியுள்ளார்.


பெரும் பட்ஜெட் படங்களின் மத்தியில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் சர்ப்ரைஸ் ஹிட்டாக அமைந்த படம் பிரதீப் ரங்கநாதன் இயக்கி, நடித்த 'லவ் டுடே'.  


நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போட்டு வருகிறது. முன்னதாக இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானபோதும் சுமார் 70 கோடிகள் வரை வசூலை வாரிக்குவித்துள்ளது.


 




வெறும் 5 கோடிகளில் மட்டுமே இந்தப் படம், 2கே இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்பட்டாலும் குடும்ப ஆடியன்ஸ் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ’லவ் டுடே’ படத்தின் வெற்றி குறித்து பாலிவுட்டின் பிரபல நடிகரான வருண் தவான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வியந்து பேசியுள்ளார்.


இந்த நேர்காணலில் நடிகர் கார்த்தி, கரண் ஜோஹர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்ட நிலையில், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவது விவாதித்தனர். இன்றைய ஓடிடி யுகத்தில் பெரிய படங்கள் தான் தியேட்டர்களில் ரசிக்கப்படுவதாக விவாதங்கள் எழுந்தபோது தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ படத்தின் வெற்றி குறித்து வருண் தவான் வியந்து பேசினார். 


அப்போது பேசிய நடிகர் கார்த்தி ”தமிழ்நாட்டில் தற்போது 20 வயது இளைஞர்களிடம் தான் அதிக பவர் உள்ளது. நாம் பணத்துக்காக போராட வேண்டும். குழந்தைகள், இளைஞர்களிடம் அதிக பணம் உள்ளது. அதனால் எதைப் பார்க்க வேண்டும் என அவர்கள் முடிவெடுக்கிறார்கள்.


அதிகாலை 4 மணி ஷோக்களை கண்டுகளிக்க அவர்கள் தயாராக உள்ளார்கள். முன்பெல்லாம் 2 அல்லது 3 அதிகாலைக் காட்சிகளே இருக்கும். ஆனால் தற்போது 120 முதல் 200 அதிகாலைக் காட்சிகள் ஒளிபரப்பப்படுகின்றன. இளைஞர்கள் தான் அங்கு வருகை தருகிறார்கள்” என கலகலப்பாகப் பேசினார்.


விக்ரம்’ படம் குறித்தும் சிலாகித்து பேசிய வருண் தவான் எதிர் காலத்தில் தமிழ், தெலுங்கு படங்களில் பணியாற்ற விரும்பும் தன் ஆசையையும் வெளிப்படுத்தினார். தன் வீட்டில் தமிழ், தெலுங்கு படங்கள் பார்த்தே அதிகம் வளர்ந்ததாகவும், தென்னிந்திய சினிமாவில் தான் நடிக்கும் நாள் விரைவில் வரும் என்றும் வருண் தவான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.