பிரதீப் ரங்கநாதன் , இவானா, சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் ஆகியோர் நடிப்பில் நவம்பர் 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் 'லவ் டுடே'; மக்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்ற இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலை குவித்தது; தமிழகத்தில் இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பையடுத்து 'லவ் டுடே' திரைப்படத்தை தெலுங்கில் ஸ்ரீ வெங்கடேஸ்வர கிரியேஷன்ஸ் நிறுவனம் டப் செய்து வெளியிட்டது. தெலுங்கு ரசிகர்களும் இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடினர்.
அண்மையில் நடந்து முடிந்த ரவுண்ட் டேபிள் நிகழ்ச்சியிலும் இந்தப்படம் குறித்தான விவாதம் எழுந்தது. அதில், சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படங்கள், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறுவது பற்றி விவாதித்தனர். இன்றைய ஓடிடி யுகத்தில் பெரிய படங்கள்தான் தியேட்டர்களில் ரசிக்கப்படுவதாக விவாதங்கள் எழுந்தபோது, தமிழ் சினிமாவில் ‘லவ் டுடே’ படத்தின் வெற்றி குறித்து வருண் தவான் வியந்து பேசினார்.
லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்
இந்த நிலையில் இந்த படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது என்றும் ஆஷூகி படத்தின் ஹீரோவான ஆதித்யா ராய் கபூர் லவ் டுடே படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் பரவியது. அதன் பின்னர், வருண் தவான் கதாநாயகனாக நடிக்க, வருணின் தந்தை டேவிட் தவான் அப்படத்தை இயக்கவுள்ளார் என்றும், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் அந்த படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வந்தது.
அந்த தகவல் ட்விட்டரில் வைரலான நிலையில், “லவ் டுடே படத்தின் ரீமேக் உரிமையை நான் வாங்கவில்லை. சமூக வலைதளங்களில் வரும் இதுபோன்ற செய்திகள் அனைத்தும் ஆதாரமற்றவை மற்றும் போலியானவை.” என்று போனி கபூர் அவரின் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்து விளக்கமளித்துள்ளார்.
லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்கை போனி கபூர் தயாரிக்கவில்லை என்பது தெரிந்துவிட்டது. இன்னும், இந்த படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் என்ற அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடதக்கது.