இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில்  கடந்த அக்டோபர் மாதம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் லியோ. பான் இந்திய மொழிகளில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூல் ரீதியாக வேட்டையாடி உள்ளது  என்றே சொல்ல வேண்டும். மாஸ்டர் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டுக்கு பிறகு இரண்டாவது முறையாக இவர்களின் கூட்டணி வெற்றி கூட்டணியாக நிரூபித்துள்ளது. 


 



தளபதி 68 :


லியோ படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு  இயக்கத்தில் நடிகர் விஜய் 'தளபதி 68' படத்தில் நடித்து வருகிறார். பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக தற்போது நடைபெற்று கொண்டு இருக்கிறது. ஆக்ஷன் சீக்வன்ஸ், பாடல் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே தாய்லாந்தில் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 


இரட்டை கதாபாத்திரம் :


'தளபதி 68' திரைப்படத்தில் நடிகர் விஜய் அப்பா - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் இது ஒரு டைம் ட்ராவல் கதையை மையமாக வைத்து உருவாகி வருகிறது. ஏற்கனவே டாப் ஸ்டார் பிரஷாந்த், நடிகர் பிரபுதேவா, சினேகா, லைலா, அஜ்மல் உள்ளிட்ட பலர் ஒப்பந்தமாகி உள்ளனர். 80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்த மைக் மோகன் இப்படத்தின் வில்லனாகிறார். 


வெங்கட் சினிமாட்டிக் யுனிவர்ஸ் :


லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களை லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இணைத்து வருவது போல இயக்குநர் வெங்கட் பிரபுவும் 'தளபதி 68' படத்தை சினிமாட்டிக் யூனிவர்ஸில் இணைக்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நியூ இயர் ஸ்பெஷலாக தளபதி 68 படத்தின் பர்ஸ்ட்  லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


 



'லவ் டுடே' நாயகி :


பிரதீப் ரங்கநாதனின் 'லவ் டுடே' திரைப்படம் மூலம் அசத்தலான வரவேற்பை பெற்ற  நடிகை இவானா, தளபதி 68 திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிப்பதால் ஒரு வேளை அவரின் தங்கையாக இவானா நடிக்க கூடும் என கூறப்படுகிறது. இவர்களின் ஆன் ஸ்கிரீன் ப்ரசென்ஸ் எப்படி இருக்கும் என்பதை பார்க்க மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.  தளபதி 68 படத்தின் ஒவ்வொரு அப்டேட்டாக வெளியாக ரசிகர்களை ஆர்வம் எகிறி கொண்டு போகிறது. லவ்டுடே படத்தையும் இதே ஏஜிஎஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. தொடர்ந்து தோனி தயாரித்திருந்த எல்.ஜி.எம் படத்திலும் இவானா ஹீரோயினாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.