Ameer and Surya: தனக்கும், சூர்யாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து நடிகர் அமீர் மனம் திறந்து பேசியுள்ளார். 

 

பாலாவிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர், சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். சூர்யா, நந்தா, த்ரிஷா, லைலா உள்ளிட்டோர் நடித்த அந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. படம் வசூலிலும் சாதனை படைத்தது. ஆனால், மௌனம் பேசியதே படத்தின் மூலம் சூர்யாவுக்கும், அமீருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். 

 

தற்போது அமீரின் இயக்கத்தில் வெளிவந்த பருத்திவீரன் படம் பூதாகரமாக வெடித்த நிலையில், மௌனம் பேசியதே படத்தில் சூர்யா உடனான மோதல் குறித்த காரணம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக பேட்டியளித்த அமீர், ”மௌனம் பேசியதே முதல் படம் என்பதால் பத்திரிகையாளர்களை பார்த்ததும் எனக்கு வியர்த்து விட்டது. அங்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் நீங்கள் ஹீரோவுக்கு கதை எழுதினீர்களா அல்லது கதையை எழுதி விட்டு ஹீரோவை தேர்வு செய்தீர்களா என்று கேள்வி எழுப்பினர். 

 

அதற்கு பதிலளித்த நான், எதார்த்தமாக ஹீரோவுக்காக நான் கதை எழுதவில்லை. அதை எழுதிவிட்டு தான் அந்த கதை என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்ப ஹீரோ என்றேன். ஆனால், அது எனது அருகில் இருந்த சூர்யாவை காயப்படுத்தி விட்டது. அதனால், சூர்யா கோபித்துக் கொண்டு சென்றார்” என அமீர் விளக்கம் அளித்துள்ளார். 

 

முன்னதாக பருத்திவீரன் படத்தில் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. பருத்திவீரன் படத்தால் தனக்கு ரூ.2 கோடி கடன் ஏற்பட்டதாக அமீரும், கொடுத்த பணத்திற்கு அதிகமாக இயக்குநர் அமீர் செலவை இழுத்து விட்டதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவும் மாறி, மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த சம்பவத்தில், அமீருக்கு ஆதரவாக இயக்குநர்கள் சசிகுமார், சமுத்திரக்கனி பாடலாசியர் சினேகன், பொன்வண்ணன் உள்ளிட்டோர் குரலெழுப்பி வருகின்றனர். கார்த்தி ஹீரோவாக அறிமுகமான பருத்தி வீரன் படத்தை அமீர் இயக்க ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். படத்தின் பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில், அதில் இருந்து ஞானவேல் ராஜா விலகியதாக அமீர் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

 

பருத்திவீரன் படத்தின் மீதான சர்ச்சை குறித்து பேசிய அமீர், படத்தை என்னையே தயாரித்து கொள்ளும்படி சூர்யா கூறியதாக அமீர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் படம் முடிந்ததும் ஞானவேல் ராஜா தானே படத்தை வெளியிடுவதாக வந்து நின்றார் எனவும் குறிபிட்டிருந்தார்.