இந்தியத் திரைத்துறை பிரபலங்களுள் மாதவன் - சரிதா பிர்ஜே தம்பதியினர் மிக அழகான தம்பதிகளாகக் கருதப்படுகின்றனர். இவர்களின் காதல் கதையையே ஒருவர் திரைப்படமாக எடுக்கும் அளவுக்கு அழகான கதையாக இருக்கிறது. 


நடிகர் மாதவன் தன் வாழ்க்கைத் துணையை அவர் ஆசிரியராகவும், சரிதா மாணவியாகவும் இருக்கும் போது கண்டுபிடித்துள்ளார். மாதவன் திரைத்துறையில் நுழைவதற்கு முன்பே இருவரும் பழகத் தொடங்கிவிட்டனர். மகாராஷ்ட்ராவின் கொல்ஹாபூர் பகுதியில் மேடைப் பேச்சு தொடர்பான கருத்தரங்கம் ஒன்றில் கலந்துகொண்ட சரிதா பிர்ஜே அங்கு ஆசிரியராக இருந்த மாதவனைச் சந்தித்துள்ளார். எலக்ட்ரானிக்ஸ் பட்டப்படிப்பு முடித்த மாதவன், சில ஆண்டுகள் மேடைப் பேச்சுத் திறமை குறித்த வகுப்புகளைக் கற்பித்து வந்துள்ளார். சரிதா அப்போது விமானப் பணிப்பெண்ணாகும் ஆசையோடு இருந்திருக்கிறார். சில வகுப்புகளுக்குப் பிறகு, சரிதா மாதவனை டின்னருக்கு அழைக்க, மாதவனும் சம்மதித்துள்ளார். 


ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மாதவன், `சரிதா என்னுடையா மாணவி. ஒரு நாள் என்னை டின்னருக்கு அழைத்தார். நான் கருப்பாக இருந்ததால் எனக்குத் திருமணம் ஆகாதோ என நினைத்தேன். உடனே வாய்ப்பைப் பிடித்துக் கொண்டேன். அப்படியே திருமணமும் ஆனது’ எனக் கூறியுள்ளார். 



இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கு முன்பாக சுமார் 8 ஆண்டுகள் காதலித்து வந்துள்ளனர். தொடர்ந்து, கடந்த 1999ஆம் ஆண்டு, தங்கள் பாரம்பரிய வழக்கப்படி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்களும், குடும்ப உறுப்பினர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். சரிதாவுடனான திருமணத்திற்குப் பிறகே, மாதவன் திரைத்துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். 


கடந்த 2000ஆம் ஆண்டு இயக்குநர் மணிரத்னம் உருவாக்கத்தில் வெளியான `அலைபாயுதே’ மூலம் பிரபலமடைந்தார் மாதவன். அதனைத் தொடர்ந்து, `சாக்லேட் பாய்’ என அழைக்கப்பட்டு தொடர்ந்து `கன்னத்தில் முத்தமிட்டாள்’, `ரன்’, `அன்பே சிவம்’, `ஆயுத எழுத்து’ முதலான திரைப்படங்களின் வெற்றி மூலமாக பெரிதும் அறியப்பட்டார். 


பணி நெருக்கடிகளின் போதும், தன் மனைவியுடன் நேரம் செலவிட வெளியூர் படப்பிடிப்புகளுக்கு அவரை அழைத்துச் செல்வது மாதவனின் வழக்கம். `வெளியூர்ப் படப்பிடிப்புகளின் போது, அழகான பெண்கள் சூழ இருக்கும் வேளையில், மனதைக் கட்டுப்படுத்துவது கடினமானது. எனவே எங்கே சென்றாலும் சரிதாவை அழைத்துச் செல்வேன். நடிகைகளோடு அறிமுகமாகும் போது அவரும் இருப்பார். மேலும், நான் வெளியூர்களின் தனியாக உணர மாட்டேன். மேலும், என்னைக் காதல் காட்சியில் காணும் போது, சரிதாவுக்கு அவை உண்மையில்லை எனத் தெரியும்’ எனக் கூறியுள்ளார் நடிகர் மாதவன். 



கடந்த 2005ஆம் ஆண்டு, இந்தத் தம்பதியினருக்கு `வேதாந்த்’ என்ற மகன் பிறந்துள்ளார். சமீபத்தில் டென்மார்க் நாட்டில் நடைபெற்ற சர்வதேச நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார் வேதாந்த். ஏற்கனவே இதே போட்டியில் அவர் வெள்ளிப் பதக்கம் பெற்றிருந்தார். சுமார் 23 ஆண்டுக் கால காதல் வாழ்க்கையில் இருக்கும் மாதவன் - சரிதா தம்பதியினர் சமகால தம்பதிகளுக்கு `couple goals’ ஆக மாறியிருக்கின்றனர்.