விஜய் சேதுபதி:


ரஜினிகாந்த், விஜய், கமல் ஹாசனுக்கு வில்லனாக நடிக்கும் அளவிற்கு சினிமாவில் உச்சம் தொட்டவர் நடிகர் விஜய் சேதுபதி. எதார்த்தமான நடிப்பு, ஒளிவு மறைவுவின்றி பேசும் குணம், சினிமாவை புரிந்து கொண்ட விதம், வாழ்க்கையின் யதார்த்தம், ரசிகர்களின் மீதான அன்பு, இவையெல்லாம் சேர்த்து தான் விஜய் சேதுபதியை இன்று உச்சாணி கொம்பில் ஏற்றி அழகு பார்த்து வருகிறது.


ஒரு சாதாரண நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர். 250 ரூபா பேட்டாவுக்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்த விஜய் சேதுபதி இன்று, ரூ.15 கோடி வரையில் சம்பளம் வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். ஆரம்ப காலத்தில் வாய்ப்புக்காக இவர் கோடம்பாக்கத்தில் ஏறாத சினிமா கம்பெனிகளே இல்லை. ஒரு சிறு ரோலில் கூட இவரை நடிக்க வைக்க சிலர் தயாராக இல்லை. நிராகரிப்புகளை அதிகம் சந்தித்த விஜய் சேதுபதிக்கு, வாய்ப்பு கொடுக்கிறேன் என கூறி சிலர் தராமல் போனதால் ஏமாற்றங்களும் பழகி போனது தான்.


 சூது கவ்வும்:


ஏமாற்றம் மற்றும் தோல்விகளை தன்னுடைய வளர்ச்சிக்கான அஸ்திவாரமாக மாற்றி விடாமுயற்சியோடு திரைப்பட வாய்ப்புகளை பெற்று தன்னுடைய நடிப்பு திறமையை நிரூபித்தார். அப்படி அவர் நானே இதில் நடிக்கிறேன் என கேட்டு நடித்த படம் தான் சூது கவ்வும். உண்மையில் அந்த கதை அவருக்கானதே கிடையாதாம். அது லொள்ளு சபா மனோகருக்காக எழுதப்பட்ட கதையாம். இதைப்பற்றி அந்த படத்தின் தயாரிப்பாளர் சி வி குமார் சமீபத்தில் கூறியிருக்கிறார். 


இது குறித்து அவர் கூறுகையில், சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என நலனிடம் நான் கூறினேன். அதற்க்கு அவர் வேண்டாம் சார்... நான் அவரை யோசிக்கவே இல்லை.  நான் லொள்ளு சபா மனோகரை மனதில் வைத்து தான் இந்த கதையை எழுதினேன் என கூறினார்.




மனோகர் இல்லை என்றால், யூகி சேது கிட்ட கதை சொல்லலாம். விஜய் சேதுபதி ஒரு ஹீரோ ஃபேஸ் காமெடிக்கு எந்த அளவுக்கு செட் ஆவார் என பயந்தார். பின்னர் விஜய் சேதுபதி, நலனை ஒருமுறை சந்தித்தபோது, கதையை வாங்கி படித்துவிட்டு இந்த கதை நான் பண்ணுகிறேன் என்று வந்து நின்றார். டெஸ்ட் ஷூட் அரைமனதோடு செய்த நலன், பின்னர் விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பர் என கூடுதலாக அந்த கதையில் சில மாற்றங்கள் செய்தார். படமும் சூப்பர் ஹிட் ஆனது என தயாரிப்பாளர் சிவி குமார் கூறியுள்ளார்.