Lollu Sabha:  கொரோனா காலத்தில் என்னால் முடிந்தது...லொள்ளு சபா சேஷுவின் எமோஷனல் பதிவு


90ஸ் கிட்ஸ்களின் மிகவும்  ஃபேவரட் ஷோ என்றால் அது விஜய் தொலைக்காட்சியின் "லொள்ளு சபா" தான். இந்த ஷோ மூலம் சினிமா வாய்ப்பு பெற்று இன்று திரை நட்சத்திரங்களாய்  மின்னுபவர்கள் பலர். சந்தானம், ஜீவா, யோகி பாபு போன்ற பலர் லொள்ளு சபா ஷோ தான் அடித்தளமாய் இருந்துள்ளது எனபது மறுக்க முடியாத உண்மை. அப்படி அவர்களின் திறமை வெளிப்படுவதற்கு உறுதுணையாய் இருந்தவர்கள் துணை நடிகர்கள். அப்படி துணை நடிகராக இருந்து இன்று பல படங்களில் நடித்து வருபவர் சேஷு.  


லொள்ளு சபா வாய்ப்பு கிடைத்தது பற்றி ஒரு நேர்காணலில் அவர் கூறுகையில் விஜய் தொலைக்காட்சியில் வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற சீரியலில் நடிக்கும் போது தான் அவருக்கு ராம் பாலா அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அப்படி தான் லொள்ளு சபா வாய்ப்பு கிடைத்தது என்றார். 


 



லொள்ளு சபா நிகழ்ச்சியின் ஹீரோவாக இருந்தவர் ஜீவா. அவருக்கு சன் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தவுடன் சந்தானம் லொள்ளு சபா நிகழ்ச்சியில் ஜீவாவின் இடத்தை பிடித்தார். ஆனால் சேஷு அவர்கள் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவருடைய நகைச்சுவை உணர்வு, வெகுளித்தனமான  பேச்சு இவை அனைத்தும் மற்றவர்கள் அவருடன் நெருக்கமாக பழக காரணமாய் இருந்தது. 


சேஷு அவர்களின் முதல் சினிமா வாய்ப்பு கிடைத்தது ரிமோட் திரைப்படம் மூலம் தான். இருப்பினும் நடிகர் தனுஷ் அறிமுகமாகிய துள்ளுவதோ  இளமை திரைப்படத்தில் சேஷுவும் நடித்திருந்தார். ரிமோட் படத்திற்கு முன்னர் துள்ளுவதோ இளமை வெளியானதால் சேஷு அவர்களின் முதல் திரைப்படம் அதுவாகவே ஆனது. 


அதனை தொடர்ந்து வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, வாலு, இந்தியா பாக்கிஸ்தான் உள்ளிட்ட பல திரைப்படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் சிவா ஹீரோவாக நடிக்கும் சிங்கள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சுந்தரமும், சந்தானத்தின் குலு குலு திரைப்படம், எஸ்.ஜே. சூர்யாவின் கடமையை செய், வரலக்ஷ்மி நடிக்கும் கன்னி தீவு, கொற்றவை, 4 ஜி, ராயர் பரம்பரை போன்ற பல திரைப்படங்களில் சிறிய ரோல்களில் நடித்துள்ளார் சேஷு.  


சேஷுவின் சமூக சேவை :


திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி பல சமூக சேவையிலும் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தனது உறவினர்கள், நண்பர்களின் உதவி மற்றும் நன்கொடைகளோடு பலருக்கும் அரிசி, மளிகை பொருட்கள் போன்ற பல உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக சேஷுவின் சேவை கொரோனா காலத்தில் எண்ணில் அடங்காதவை. தனது பைக் மூலம் கொரோனா விழிப்புணர்வு செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் மைக் மூலம் ஒளிபரப்பி வந்திருக்கிறார். பலருக்கு கொரோனா காலத்தில் 5 kg அரிசி பை, மளிகை சாமான், மாஸ்க், காய்கறிகள், துணிமணிகள், பட்டாசு போன்ற பல உதவிகளை செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "நான் உடளவில் மட்டுமே பொருட்களை கொண்டு சேர்க்கிறேன். ஆனால் எனக்கு இந்த பொருட்களை வாங்குவதற்கு என் நண்பர்களும், உறவினர்களும், சினிமா துறையை செர்வர்களும் தான் காரணம். அவர்களின் நன்கொடை உதவி இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது" என்றார். 


சேஷு ஒரு இதயநோயாளியாக இருப்பினும் இந்த கொரோனா காலத்தில் அந்த அரிசி பைகளை தானே சுமந்து ஏழை எளியோருக்கு உதவினார். அவரை போன்று பலரும் இந்த கொரோனா காலத்தில் மற்றவர்களுக்கு தங்களால் இயன்ற அளவு உதவி செய்த அனைவர்க்கும் தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார். 


மேலும் சினிமா துறைக்கு இந்த நேர்காணலின் மூலம் ஒரு வேண்டுதலை வைத்துள்ளார். பல லோ பட்ஜெட் திரைப்படங்கள் இந்த கொரோனா காலத்தில் வெளிவராமல் பல தயாரிப்பாளர்கள் நஷ்டத்தில் வாடுகின்றனர். தற்போது இந்த OTT தளம் மூலம் திடரைப்படங்கள் வெளிவருவது போல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட லோ பட்ஜெட் திரைப்படங்களை OTT மூலம் வெளியிட ஏதாவது வாய்ப்புகள் இருந்தால் அதை தயவு கூர்ந்து செய்ய வேண்டும் என்று சினிமா துறைக்கு வேண்டுதல் விடுத்துள்ளார் சேஷு.