மம்முட்டி பிறந்தநாளுக்கு சிரஞ்சீவிக்கு வாழ்த்துச் சொல்லி பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷ்ராஃப் நெட்டிசன்களிடம் மாட்டிக் கொண்டார்.


மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டி அண்மையில் தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அப்போது அவருக்கு மொழிகள் கடந்து திரையுலகம் முழுவதும் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. அந்த வகையில் தமிழ் நடிகர் ரஹ்மான்.. அட அந்தாங்க கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என புதுப்புது அர்த்தங்களில் பாடியிருப்பாரே அந்த ரஹ்மான் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். ரஹ்மானில் குழப்பம் வந்துவிடக் கூடாது அல்லவா அதனால் தான் இந்த விளக்கம்.


அந்த வாழ்த்தில் மம்முடியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்திருந்த அவர், அதன் கீழே, அன்புக்குரிய இச்சாகா எனது நடிப்புப் பயணம் உங்களுடன் தான் தொடங்கியது. எனது முதல் ஷாட் உங்களுடன் அமைந்தது. எனது முதல் வசனமும் உங்களுடனானதே. அதன்பின்னர் எனது வாழ்க்கையின் ஆகச் சிறந்த படங்கள் எல்லாம் உங்களுடனேயே அமைந்தது. நான் கொடுத்து வைத்தவன். 38 நீண்ட மறக்கமுடியாத மகிழ்ச்சியான ஆண்டுகள் உங்களுடனான பந்தத்துடன் ஓடிவிட்டன. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எனது சகோதரரே என்று நெகிழ்ச்சியாக உருகி உருகி பதிவிட்டிருந்தார்.


ஆனால், ஒரே ஒரு ட்வீட்டைப் போட்டு இந்த ட்வீட்டை மறையைச் செய்துவிட்டார் ஜாக்கி ஷ்ராஃப். இப்போது நெட்டிசன்கள் எல்லோரும் ஜாக்கியின் ட்வீட்டை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக் கொண்டு கமென்ட்டுகளை அள்ளித்தெளித்து வருகின்றனர். இதில் கொசுறு போல் ரஹ்மானும் ட்வீட்டும், புகைப்படமும் ஒட்டிக் கொண்டுள்ளது.




பாலிவுட்டின் பிரபல நடிகர் ஜாக்கி ஷ்ராஃப். இவர் தமிழ்த் திரையுலகுக்கும் நன்கு பரிச்சியம் ஆனவர் தான். இவர் ரஹ்மான் பதிவிட்ட மம்முட்டி வாழ்த்து ட்வீட்டுக்கு கீழ் 'எப்போதும் மகிழ்ந்திருங்கள் சிருகாரு' என்று மாற்றி சிரஞ்சீவிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பதிவிட்டுவிட்டார். சிரஞீவி தெலுங்குப் பட நடிகர். மம்முட்டி மலையாளப் பட நடிகர். இருவருமே அவரவர் மாநிலத்தில் மெகா ஸ்டார்கள் தான். ஆனால், நடிப்பில் மறந்தும் ஒரு பிசிறும் தட்டிவிடாத ஜாக்கி ஷ்ராஃப் ஏனோ பாவம் பெயரில் குழம்பி வாழ்த்தை மாற்றிச் சொல்லிவிட்டார். அவ்வளவுதான் நெட்டிசன்கள் அவரை வச்சு செய்துவிட்டனர். ஒருகட்டத்தில் அவர் ட்வீட்டை டெலீட் செய்தார். ஆனாலும் விட்டார்களா? ஸ்க்ரீன்ஷாட் எடுத்துவைத்துக் கொண்டு வம்பளந்து வருகின்றனர்.


அண்மையில் பாலிவுட் நடிகர் சித்தார்த் மறைவுக்கு தமிழ் நடிகர் சித்தார்த்துக்கு ஆர்.ஐ.பி. போட்டு அதிர்ச்சியைக் கிளம்பினர் பல்வேறு இணையவாசிகள். பிரபலங்கள் செய்யும் சிறு பிழையை ட்ரால் செய்யும் நெட்டிசன்களின் தவறை ட்ரால் செய்வது யார்? ஆகையால் யாராக இருந்தாலும் தவறு செய்வது இயல்பதுதான் அதைவைத்து கல்லா கட்டக் கூடாது என நெட்டிசன்களுக்கு அறிவுரை கூறுகின்றனர் நல் உள்ளம் கொண்ட சக நெட்டிசன்கள்.