பிரபல தொடரான மர்மதேசத்தில் ராசுவாக நடித்தவர் லோகேஷ் ராஜேந்திரன். மேலும்  'விடாது கருப்பு', - 'ஜீபூம்பா' போன்ற தொடர்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இவர் நேற்றைய தினம் சென்னையில் இறந்து விட்டார் லோகேஷ் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் இயக்குநராக அறிமுகமாக இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது.






நடந்தது என்ன? 


கடந்த ஞாயிறு அன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் லோகேஷ் ராஜேந்திரன் சுயநினைவின்றி விழுந்து கிடந்துள்ளார். அப்போது 108 ஆம்புலன்ஸ் மூலம் அவர் மீட்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தீவிர சிகிச்சையில் இருந்த அவர், நேற்று காலமானார்.




முதற்கட்ட விசாரணையின் போது லோகேஷ் திருமணமாகி விவாகரத்தானவர் என்றும், காஞ்சிபுரத்தில் அவரது தாயுடன் தற்போது வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக லோகேஷ் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. குடும்ப பிரச்சினைகள் தான் லோகேஷின் தற்கொலைக்கு காரணமா என போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் லோகேஷின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.  


 






சமீபத்தில் மர்ம தேசம் தொடர் குழுவினர் அனைவரும் அத்தொடரின் 25 ஆண்டுகள் நிறைவு விழாவை சென்னையில் கொண்டாடினர். அந்த விழாவில் லோகேஷ் ராஜேந்திரனும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.