மாமன்னன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் பார்த்து படக்குழுவினரைப் பாராட்டியுள்ளார்.
ட்ரெண்டிங்கில் மாமன்னன்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’.
உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய கடைசி படம் என அறிவித்துவிட்ட நிலையில், இப்படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிறின. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதன்முறையாக இப்படத்தில் மாரி செல்வராஜ் கைக்கோர்த்த நிலையில், தேனி ஈஸ்வர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கடந்த ஜூன் 29ஆம் தேதி மாமன்னன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில், இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. மேலும், 35 கோடிகள் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், 52 கோடிகள் வரை பாக்ஸ் ஆஃபிஸில் குவித்தது.
ஓடிடி ரிலீஸ்
எம்.எல்.ஏ மாமன்னன் எனும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடித்த நிலையில், அவரது நடிப்பு பாராட்டுகளைப் பெற்றது. மேலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஃபஹத்தின் நடிப்பு பாராட்டுகளை அள்ளியதுடன், ஓடிடி படம் வெளியான பிறகு பாராட்டுகளை அள்ளி வைரலாகி வருகிறது.
மாமன்னன் திரைப்படம் கடந்த ஜூலை 28ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், தொடர்ந்து கடந்த சில நாள்களாக நெட்டிசன்கள் இப்படத்துக்கு விமர்சனங்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், நெட்டிசன்களின் வரிசையில் லோகேஷ் கனகராஜூம் தற்போது மாமன்னன் திரைப்படம் பற்றி பாசிட்டிவ் விமர்சனம் வழங்கியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் சொன்னது என்ன?
“எனக்குத் தெரியும், நான் லேட் தான், ஆனால் மாமன்னன் பார்த்தது ஒரு சிறந்த அனுபவம். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவரும் சிறப்பாக வேலை பார்த்துள்ளனர். இன்னும் படத்திலிருந்து என்னால மீள முடியவில்லை.
உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ், வடிவேலு, ஏ.ஆர்.ரஹ்மான், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட ஒட்டு மொத்த குழுவுக்கும் என் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
சென்ற வாரம் இப்படம் ஓடிடியில் வெளியான நிலையில், லோகேஷ் கனகராஜ் மாமன்னன் படத்தை ஓடிடி தளத்தில் பார்த்தாரா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.