தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணும் வகையில் படங்கள் எடுத்து, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
 
தனது முதல் படமான மாநகரம் தொடங்கியே தரமான் ஹிட் படங்களைக் கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில், சென்ற ஆண்டு கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி விக்ரம் திரைப்படம் மெகா ஹிட் அடித்தது, இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை லோகேஷ் இயக்கி வருகிறார். 


லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்ற நிலையில், விரைவில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.


இந்நிலையில், சமீபத்தில் தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசிய லோகேஷ் கனகராஜின் காலில் மாணவி ஒருவர் விழ முயன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


கோயம்புத்தூர் தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொண்ட மாணவி தன் கால்களில் விழ முயன்ற நிலையில், லோகேஷ் செய்வதறியாது திகைத்து, பின் அந்த மாணவியைக் கடிந்துகொள்வதும் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.


இந்நிலையில், இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், “ 2 கே பூமர்ஸ். லோகேஷ் கனகராஜ் மானஸ்தர் என்பதால் அம்மாணவியைக் கடிந்து கொண்டார். கல்லூரி வளாகத்தினுள் பட ப்ரமோஷனுக்காக திரைப்படக் கலைஞர்களை அனுமதிக்கும் போக்கு அதிகரித்து வருவதால் ஏற்படும் விளைவுகள் இவை. இன்னும் என்ன கூத்தெல்லாம் அரங்கேறப்போகிறதோ!” எனவும் பதிவிட்டுள்ளார்.


 






இந்நிலையில், 2கே கிட்ஸை பூமர்ஸ் எனக் குறிப்பிட்டு ப்ளூ சட்டை மாறன் வீடியோ பகிர்ந்துள்ள நிலையில், அவரது கருத்து  இளைய தலைமுறையினரை கடுப்பில் ஆழ்த்தியும், 90ஸ் கிட்ஸை உற்சாகத்தில் ஆழ்த்தியும் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.