மன்சூர் அலி கான் மாதிரி ஒரு ஆள நான் பார்த்ததே இல்லை என விக்ரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.


லோகேஷ் இயக்கத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி, காளிதாஸ் ஜெயராம், சூர்யா என பெரிய பட்டாளமே நடித்துள்ள மல்டி வெர்ஸ் வகையறா படம் தான் விக்ரம். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் வெற்றியை அங்கீகரித்து, லோகேஷ் கனகராஜூக்கு புதிய ஆடி காரை பரிசாக அளித்துள்ளார் கமல்ஹாசன். நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றையும் கமல்ஹாசன் பரிசாக அளித்துள்ளார்.


விக்ரம் பட வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் மார்க்கெட் எங்கோ சென்றுவிட்டது. ஏற்கெனவே மாஸ்டரில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த விஜய், இப்போது வம்சி படத்தை முடித்துவிட்டு மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணையவிருக்கிறார்.


வெற்றிகளைக் குவித்துள்ள விக்ரம் பட இயக்குநர் அண்மையில் ஒரு யூடியூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் தனது படங்கள் பற்றி பல்வேறு சுவாரஸ்ய தகவல்களைப் பகிர்ந்தார். அப்போது மன்சூர் அலி கான் பற்றியும் பேசியிருக்கிறார்.


மன்சூர் அலி கான் என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும் சார். அவரைப் போன்ற ஒரு கேரக்டரை, ஒரு வித்தியாசமான ஆட்டிட்யூட் கொண்ட நடிகரை நான் பார்த்ததே இல்லை. அவருக்காக ஒரு ரோல் எழுதணும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை. நிச்சயமாக நான் அவரை என் படத்தில் நடிக்க வைப்பேன். அவருடைய பேட்டி ஒன்று பார்த்தேன். அதில் ஆங்கர் கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார். அவரோ அருகிலிருக்கும் ஒரு செடியில் இருந்து ஒரு இலையை பிய்த்து வாயில் கடித்துக் கொண்டிருப்பார். அப்படியெல்லாம் யாரும் ஒரு இன்டர்வியூவில் செய்து நான் பார்த்ததே இல்லை. அவரோட அந்த ஆட்டிட்யூட் எனக்குப் பிடிக்கும். விக்ரம் படத்தில் சக்க சக்க பாட்டை ஒரு சீக்வன்ஸாக நான் பயன்படுத்தினேன். அது காட்சியோடு பொருந்தியிருக்கும். அந்தப் பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும்போது கமல் சார் என் கிட்ட கேட்டார். என்ன அது பாட்டு என்றார். இல்ல சார் அது ஃபைட் சீக்வன்ஸுக்காக என்றேன். அவர் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை. அப்படித்தான் அது அமைந்தது என்றார்.




இரவு காட்சிகள், ஆதரவற்றோர் ஆசிரமங்கள்..
லோகேஷின் உலகம் என்று ஒன்று சொல்கிறீர்கள். அந்த உலகத்தில் இருட்டு, குற்றம் இருக்கிறது. அத்துடன் கூர்நோக்கு பள்ளி, ஆசிரமம் போன்றெல்லாம் வருகிறதே அதன் பின்னணி என்ன என்று கேள்வி எழுப்பப்பட அதற்கு லோகேஷ், அதில் திட்டமிட்டு ஏதும் புகுத்தப்படவில்லை கதைக்கு அது அவசியமானதாக இருந்தது. கைதியின் ஆசிரமத்தை காட்டியே இருக்க மாட்டேன். மாஸ்டரில் அது ஆதரவற்றோர் ஆசிரமம் அல்ல ஒரு ஜுவனைல் ஹோம். எல்லாம் கதைக்கு தேவைப்பட்டது. மாஸ்டரில் விஜய் சேதுபதி நடித்த பவானி கேரக்டர் ஏன் அவ்வளவு கொடூரமானது என்பதை விளக்க ஒரு பலமான பின்புலம் தேவைப்பட்டது. அதை அந்த ஜூவனைல் ஹோம் தந்தது என்று கூறினார்.