1991ஆம் ஆண்டு பாரதிராஜாவின் ’புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நெப்போலியன், 1993ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் படமான ’சீவலப்பேரி பாண்டி’யில் ஹீரோவாகி, தொடர்ந்து இன்று வரை பல படங்களில் பல வித கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.


மேலும் கோலிவுட் தாண்டி 'டெவில்ஸ் நைட்’, ’க்ரிஸ்மஸ் கூப்பன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து நெப்போலியன் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார். 


நெப்போலியன் தமிழில் இறுதியாக பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ’சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார்.






தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நெப்போலியன் நடித்துள்ளார். 


நெப்போலியன் குடும்பம்


நடிகர் நெப்போலியனுக்கு ஜெயசுதா என்கிற மனைவியும் தனுஷ் குணால் என்கிற இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் அவரை மருத்துவர்களிடம் காண்பிக்க அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.


அங்கே டென்னஸி மாகாணத்தில் தனது குடும்பத்துடன் தற்போது வசித்து வருகிறார் நெப்போலியன். தற்போது அங்கிருந்து தான் விவசாயம் செய்யும் நிலத்தின் வீடியோவைப் பதிவிட்டுள்ளார். நடிகர் எம்.ஜி.ஆர்.ன் விவசாயி பாடலைப் பாடி அதில் தான் அமெரிக்க விவசாயி என்பதை அவர் பதிவு செய்துள்ளார்.