இன்று வெளியான கூலி திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் கூலி. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ் , நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படம் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்று அழைக்கப்படும் எல்.சி.யுவில் இணையுமா ? இணையாதா ? என்ற கேள்வி ரசிகர்களிடையே நிலவி வருகிறது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கூலி திரைப்படம் இன்று காலை 9 மணி அளவில் தமிழ்நாடு முழுவதும் முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. முன்னதாக ரஜினிகாந்த் ரசிகர்கள் சென்னையில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கு முன்பு குவிந்து மேளதாளங்களுடன் , பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அந்த வகையில் சென்னை குரோம்பேட்டை பகுதியில் அமைந்துள்ள வெற்றி திரையரங்கிற்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ரஜினியின் கட் அவுட்டிற்கு மாலை அணிவித்து பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி படம் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள் மேளதாளங்களுடன் நடனமாடி கேக் வெட்டி அனைவரும் பரிமாறிக் கொண்டனர்.
மேலும் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசை அமைப்பாளர் அனிருத், நடிகை சுருதிஹாசன் ஆகியோர் ரசிகர்களுடன் படம் பார்ப்பதற்கு குரோம்பேட்டை வெற்றி திரையரங்கிற்கு வருகை தந்தனர். அவர்களை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்று திரையரங்கிற்குள்ளே அழைத்துச் சென்றனர்,
Coolie Movie Review : ரஜினி ரசிகர்கள் இத எதிர்பார்க்கல... கூலி திரைப்பட விமர்சனம்
இதையடுத்து ரசிகர்களுடன் படம் பார்த்து விட்டு வெளியே வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில் ;
படம் நன்றாக உள்ளது. ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக படம்பார்த்து வருகின்றனர். படம் வெளியானது குறித்து இன்னொரு நாள் செய்தியாளரை சந்தித்து பேசுகிறேன்.
விஜய் , ரஜினிகாந்தை வைத்து படம் எடுத்து விட்டீர்கள் எப்போது அஜித்குமாரை வைத்து படம் எடுப்பீர்கள் என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ;
வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் அவருடன் இணைந்து படம் எடுப்பேன் இவ்வாறு கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
இசையமைப்பாளர் அனிருத் கூறுகையில் ;
தலைவர் ரஜினிகாந்த் திரை உலகத்திற்கு வந்து 50 ஆண்டுகள் கடந்ததை ஒட்டி இந்த திரைப்படம் வெளியானதை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் படத்தை பார்த்து வருகின்றனர். தலைவர் படத்தை பார்த்து ஆடிக் கொண்டே இருப்பேன் என கூறி விட்டு புறப்பட்டுச் சென்றார்.