லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் விக்ரம். இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்கிறது 


விக்ரம் படத்தின் வெற்றி கமல் மற்றும் ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்திற்கு பல வகைகளில் பெருமை சேர்த்தது. கோலிவுட் சினிமாவில் தமிழ் நாட்டில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படங்களின் பட்டியலில் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தினை அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் திரைப்படம் விக்ரம். தமிழ்நாட்டில் மட்டுமே 181 கோடி வசூல் செய்துள்ளது விக்ரம் திரைப்படம். கிட்டதட்ட 113 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உலகம் முழுவதும் சுமார் ரூ.500 கோடி வசுல் செய்தது இந்தப் படம். ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த படங்களில் அதிகப்படியான வசூல் செய்த திரைப்படம் விக்ரம்.


கடந்த 2015 ஆம் ஆண்டு கமல் நடித்த உத்தமவில்லன் வெளியான சமயத்தில் பெரியளவிலான வரவேற்பைப் பெறவில்லை. படம் வெளியான சில ஆண்டுகள் கழித்தே மக்கள் மத்தியில் இந்தப் படத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது. அதே ஆண்டில் கமல் நடித்த மற்றொரு படமான தூங்காவனம் திரைப்படமும் கடும் எதிர்பார்ப்பிற்குப் பின் தோல்வியடைந்தது. பிரெஞ்சு திரைப்படமான ஸ்லீப்லெஸ் நைட்ஸ் திரைப்படத்தின் ரீமேக் தூங்காவனம். அடுத்ததாக மலையாளத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற த்ரிஷ்யம் திரைப்படத்தின் ரீமேகான பாபநாசம் திரைப்படம் வெளியானது.


மலையாளத்தைப் போலவே தமிழிலும் பாபநாசம் திரைப்படம் பெரியளவில் வெற்றியடைந்தது . இதனைத் தொடர்ந்து கமல் இயக்கி நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியானது பாபநாசம் படத்தைத் தவிர்த்து கமல் நடிபில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை.


இதே சமயத்தில் கமலின் தயாரிப்பு நிறுவனமாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்து அடுத்தடுத்த திரைப்படங்கள் தோல்வியை சந்தித்து வந்தன. விக்ரம் படத்திற்கு முன் ராஜ்கமல் கடைசியாக தயாரித்த திரைப்படம் கடாரம் கொண்டான். விக்ரம், அப்ஷராஹாசன் ஆகியவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தன. கடாரம் கொண்டான் திரைப்படம் கடும் தோல்வியை சந்தித்தது. இந்த நிலையில்  ராஜ்கமல் நிறுவனத்தை நிலைநிறுத்த அதற்கு ஒரு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. அந்த வெற்றியைக் கொடுத்தவர் லோகேஷ் கனகராஜ்.


ஒரு படத்தின் ஒரு பாதிவரை கமலை காட்சியில் காட்டாமல் வெற்றிபெற செய்தார் லோகேஷ் கனகராஜ். அதே நேரத்தில் ஃபஹத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா ஆகிய நடிகர்களையும் கமலையும் ஒரே திரையில் சேர்ந்து நடிக்க வைத்ததிலும் லோகேஷ் கனகராஜின் முயற்சி மெச்சத்தக்கது.