லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். த்ரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மிஸ்கின் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். லியோ (Leo Film) திரைப்படம் இதுவரை 500 கோடிகளுக்கு மேலாக உலக அளவில் வசூலித்துள்ளது.


லியோ சென்சார் கட்


லியோ திரைப்படத்தில் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றிருந்த காரணத்தினால் இந்தப் படத்துக்கு யு / ஏ சான்றிதழ் வழங்கியது சென்சார் வாரியம். மேலும் படக்குழுவின் ஒப்புதலோடு ஒரு சில காட்சிகள் படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும் படத்தின் கெட்ட வார்த்தைகள் ஒரு சில இடங்களில் ஒலிநீக்கம் செய்யப்பட்டன. என்னதான் ஆக்‌சன் காட்சிகள் ரசிகர்களைக் கொண்டாட வைத்திருந்தாலும் தங்களுக்கு பிடித்த நடிகரின் படத்தை முழுமையாக பார்க்க முடியாத அதிருப்தி ரசிகர்களிடம் இருந்து வருகிறது. 


நெட்ஃப்ளிக்ஸ்


ஒரு சில காரணங்களுக்காக சில காட்சிகள் லியோ படத்தில் இருந்து நீக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் குறிப்பிட்டிருந்தார். லியோ படத்தில் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் வாங்கியுள்ளது. திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும்போது லியோ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகள் சேர்க்கப்படுமா என்று ரசிகர்கள் இணையதளத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்கள். 


லியோ அன்கட்






 இந்நிலையில் ரசிகர்களின் வேண்டுகோளின்படி லியோ படத்தின் அன்கட் அதாவது சென்சார் வாரியத்தால் நீக்கப்பட்ட காட்சிகள் இணைக்கப்பட்ட  பிரதியை பிரிட்டனில் வெளியிடத் திட்டமிட்டப்பட்டுள்ளது. படத்தின் இந்தப் பிரதிக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


18 வயதுக்கு மேற்பட்டவர்களே இந்தப் படத்தை பார்க்க அனுமதி உள்ளது. ஏ சான்றிதழ் பெற்று பிரிட்டனில் வெளியாகும் முதல் தமிழ் படம் லியோ என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து லியோ படம் ஓடிடியில் வெளியாகும்போதும் இதே மாதிரி காட்சிகள் நீக்கப்படாத பிரதி வெளியாகும் என ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது.