லியோ


விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகியது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 900 திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் லியோ திரைப்படம் ஒன்றரை வருடங்கள் கழித்து விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக அமைந்துள்ளது.


14 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் விஜய் - த்ரிஷா ஜோடி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் மிஸ்கின் கெளதம் மேனன், அனுராக் கஷ்யப், வில்லன் கதாபாத்திரத்தில் ஹரோல்டு தாஸ். எல்.சி.யு என லியோ படத்தில் ரசிகர்களை உற்சாகப்படுத்த எக்கச்சக்கமான காரணங்கள் இருக்கின்றன. படத்துக்கு கூடுதல் பலமாக இருக்கும் அனிருத்தின் இசை போனஸ். 


லியோ முதல் நாள் வசூல்


லியோ திரைப்படம் மொத்தம் 300 கோடி செலவில் உருவாகி இருக்கிறது. தமிழ். தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கும் லியோ திரைப்படம் அனைத்து மொழிகளிலும் வசூலை அள்ளி வருகிறது.


லியோ திரைப்படத்தில் ரிலீஸுக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்த நிலையில், முதலில் பாடல் வரிகள் மற்றும் ட்ரெய்லரின் இந்த வசனத்தை நீக்கச் சொல்லி சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து அந்தக் குறிப்பிட்ட வரிகளை படத்தில் இருந்து ஒலிநீக்கம் செய்தது படக்குழு. இதற்கு அடுத்ததாக லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு முன்னதாக அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டு, பின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.


இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. திரையரங்க உரிமையாளர்களிடம் மேலும் அதிக விகிதம் பங்கை விநியோகஸ்தர்கள் கேட்டதால் கடைசி வரை படத்தின் டிக்கெட்களை திரையரங்குகள் முன்பதிவிற்கு வெளியிடாமல் இருந்தன. இதனைத் தொடர்ந்து ஆந்திர மாநிலத்தில் படத்தை வெளியிடுவதற்கு பெரும் தடை ஏற்பட்டது. இதனை அடுத்து இலங்கையில் படத்தின் வெளியீடு தள்ளிப்போக, இலங்கை தமிழ் எம்.பிக்கள் விஜய்க்கு கடிதம் எழுதினர்.


இத்தனை சிக்கல்களுக்குப் பிறகு அக்டோபர் 19ஆம் தேதி அனைத்து இடங்களிலும் வெளியானது லியோ திரைப்படம். ஒரே  நாளில் உலகம் முழுவது மொத்தம் ரூ.148 கோடி வசூல் செய்து இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய இந்தியத் திரைப்படமாக சாதனைப் படைத்துள்ளது லியோ திரைப்படம்.


பரிசை நிராகரித்த விஜய்


லியோ திரைப்படம் மிகப்பெரிய வசூலை எடுக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது. சமீப காலங்களில் ஒரு படம் வெற்றிப் பெற்றால் அந்தப் படத்தின் இயக்குநர்களுக்கும் நடிகர்களுக்கும் கார் வாங்கிக் கொடுப்பது வழக்கமாகி விட்டது.  விக்ரம் படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு கார் பரிசாக வழங்கினார். மாமன்னன் படத்தின் வெற்றிக்கு இயக்குநர் மாரி செல்வராஜூக்கு கார் வழங்கினார் உதயநிதி. மேலும் ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியைக் கொண்டாடும் விதமாக ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவருக்கும் சொகுசுக் கார்களை பரிசாக வழங்கியது சன் பிக்ச்சர்ஸ். 


தற்போது லியோ படம் வெற்றிபெற்றால் நடிகர் விஜய்க்கு தயாரிப்பாளர் லலித் குமார் அதே மாதிரியான பரிசு வழங்க வாய்ப்பிருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், லலித் குமாரின் நேர்காணல் ஒன்றில்  மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தான்  நடிகர் விஜய்க்கு பரிசாக கார் வழங்க இருந்ததாகவும் அதற்கு நடிகர் விஜய் மறுத்ததாகவும் கூறியுள்ளார். மேலும், “அதான் எனக்கு சம்பளம் கொடுத்திருக்கல... அப்புறம் பரிசு எதுக்கு?” என்று விஜய் மறுத்துவிட்டார் என்றும் லலித் குமார் கூறியுள்ளார். இந்த தகவல் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.