லோகேஷ் கனகராஜ்


லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் நாளை அக்டோபர் `19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. லியோ படத்தின் ப்ரோமோஷன்களுக்காக கடந்த 20 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். லியோ படம் தொடர்பான பல்வேறு கருத்துக்களையும் அதே நேரத்தில் சினிமா குறித்த பல்வேறு  நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாக பேசி  வருகிறார்.


சமூக வலைதளங்களில் லியோ


லியோ படத்தின் மீது இருக்கும் எதிர்பார்ப்பின் காரணத்தினால் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் படம் குறித்தான தகவல்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதில் சில தவறான வதந்திகளும் பரவி வருகின்றன. லோகேஷ் கனகராஜ்  மற்றும் விஜய் இருவருக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதாக சமீபத்தில் இணையதளத்தில் தவறான வதந்தி பரவியது. 


ரசிகர்களின் மோதல்


இதனைத் தொடர்ந்து அஜித் , ரஜினிகாந்த் மற்றும் விஜய் ஆகிய மூன்று நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையில் பல்வேறு கருத்து மோதல்கள் சமூக வலைதளத்தில் ஏற்பட்டு வருகிறது. இதில் லியோ படத்தையும் தவறாக விமர்சித்து வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. பதிலுக்கு விஜய் ரசிகர்கள் அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களை தாக்கி வருகிறார்கள். இந்த சர்ச்சைகளில் எல்லாம் படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜை டேக் செய்தும் வருகிறார்கள். இது குறித்து சமீபத்தில் தனது நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.


சமூக வலைதளத்தை விட்டு விலக முடிவு


”ஒரு படத்தின் வசூல் பற்றி அதிக அழுத்தம் ரசிகர்களிடம் இருப்பதை நான் பார்க்கிறேன். ஒரு படத்தின் வசூல் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் ஆதிக்கத்தை நிரூபிக்கும் கருவியாக அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு வகையில் இது தவறான திசை நோக்கி ரசிகர்களை வழிநடத்துகிறது. இதனால் நான் சமூக வலைதளத்தை விட்டு விலகலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.  ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பதிவுகளில் என்னை ரசிகர்கள் டேக் செய்கிறார்கள்.  நான் பல திரைப் பிரபலங்களுடன் தொடர்பில் இருக்கிறேன் என்பதால் என்னை இந்த பதிவுகளில் டேக் செய்கிறார்கள். ஆனால் தெரியாமல் இந்த பதிவுகளை நான் லைக் செய்துவிட்டால், அதை காரணமாக காட்டி என்னை விமர்சிப்பார்கள். என்னை தவறாக புரிந்துகொள்வார்கள். நான் சமூக வலைதளத்தில் இருப்பதற்கு ஒரே காரணம், சின்ன பட்ஜட்டில் எடுக்கப்படும் படங்களை என்னுடைய ஆதரவை தெரிவிப்பது மூலம் அந்த படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடிகிறது. மற்றபடி சமூக வலைதளத்தில் இருக்க எனக்கு எந்த வித விருப்பமும் இல்லை. இதுவெறும் இரண்டரை மணி நேர படம்தான். அதை பார்த்துவிட்டு எல்லாரும் அவரவர் வேலைகளுக்கு செல்லலாம். இதை ஒரு போர் மாதிரி எடுத்துக்கொள்ளத் தேவையில்லை” என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.