தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் நடிகர் அஜித் முதல் ஆளாக வாக்களிக்க வருகை தந்தார்.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் தென் சென்னை தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூரில் பாரதிதாசன் தெருவில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடிக்கு காலை 6.40 மணிக்கே அஜித் வருகை தந்து விட்டார். அவரை சிறிது நேரம் அதிகாரிகள் காத்திருக்க சொல்லினர். வழக்கமாக அஜித்தை காண வாக்குச்சாவடியில் ரசிகர்கள் குவிவது வழக்கம். இதனால் மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக முதல் ஆளாக வருகை தந்தார். காத்திருந்த நேரத்தில் அங்கிருந்த வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் அஜித் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் அஜித் முறைப்படி தனது ஜனநாயக கடமையாற்றினார். கடந்த முறை நடந்த தேர்தலில் ரசிகர்கள் ஆர்வம் மிகுதியால் செய்த செயல்களால் அஜித் சற்று கோபமடைந்தார். குறிப்பாக செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை வாங்கிச் சென்ற அவர் பின்னர் வாக்குப்பதிவு முடிந்ததும் அந்த நபருக்கு அறிவுரை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தல் 2024
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் மக்கள் ஆர்வமுடம் வாக்களிக்க வருகை தந்த வண்ணம் உள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பூத் ஸ்லிப் இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களை காட்டி வாக்குகளை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்பது எத்தனை பேர் என்பதை அறியும் வகையில் https://erolls.tn.gov.in/Queue/ என்ற இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.