தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று விட்டால் அந்த சூப்பர் ஹிட் வெற்றி கொடுத்த நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர்கள் சொகுசு கார்கள் பரிசளிப்பதை சமீப காலமாக ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள். சிங்கம் 3 , க/பெ ரணசிங்கம், கோமாளி, தானா சேர்ந்த கூட்டம் இப்படி கடந்த காலங்களில் பல திரைப்பட தயாரிப்பாளர்கள் இயக்குனர்களுக்கு கார்களை பரிசளித்து இருந்தாலும் சமீபத்தில் இது மிகவும் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.


விக்ரம் :
 
கடந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்த இப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து உலகநாயகன் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய கம்பேக் வெற்றியை கொடுத்தது. அந்த வெற்றியின் அடையாளமாக இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார் ஒன்றை பரிசளித்தார் நடிகர் கமல்ஹாசன்.


 



வெந்து தணிந்தது காடு :


கடந்த ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக வெற்றி பெற்றதை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி  கணேஷ் படத்தின் இயக்குநர் கௌதம் மேனனுக்கு புல்லட் பைக்கையும், நடிகர் சிம்புவுக்கு டொயோட்டா வெல்பயர் காரையும் பரிசளித்தார்.



சர்தார் :


பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு ஸ்பை திரில்லர் ஜானரில் வெளியான சர்தார் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் படத்தின் இயக்குநருக்கு ஆடம்பரமான டொயோட்டா காரை பரிசளித்தார். 


 



 


மாமன்னன் :


மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வைகை புயல் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோரின் நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்த திரைப்படம் 'மாமன்னன்'. படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் படத்தின் தயாரிப்பாளரான உதயநிதி ஸ்டாலின் இயக்குநர் மாரி செல்வராஜுக்கு மினி கூப்பர் கார் ஒன்றை வழங்கினார். 


 



 


ஜெயிலர் :


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வரும் ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் சாதனை படைத்து வருகிறது. அதன் வெற்றியின் கொண்டாட்டமாக நடிகர் ரஜினிகாந்துக்கு BMW X7 காரை வழங்கியுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். 


மேலும் இயக்குனர் நெல்சனுக்கு விலையுயர்ந்த போர்ஷே காரை வழங்கி உற்சாகப்படுத்தி உள்ளார் கலாநிதி மாறன். இது தவிர செக் ஒன்றையும் கொடுத்து நெல்சனுக்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளார் கலாநிதி மாறன்.  ஜெயிலர் திரைப்படம் நெல்சனுக்கு மட்டுமின்றி சூப்பர் ஸ்டாருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.