லியோ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்து அசத்திய படங்களைப் பார்க்கலாம்.


 லியோ


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் , த்ரிஷா, பிரியா ஆனந்த், மிஸ்கின், கெளதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் நடித்து உருவாகியிருக்கும் திரைப்படம் லியோ. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கு நிலையில் 7 ஸ்க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.


வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ படத்தின் போஸ்டர்களை வரிசையாக வெளியிட்டு வருகிறது படக்குழு. இதில் சமீபத்தில் வெளியான இந்தி மொழிக்கான போஸ்டரில் விஜய் மற்றும் சஞ்சய் தத் இடம்பெற்றிருந்தனர்.


சமீப காலங்களில் தென் இந்தியத் திரைப்படங்கள் வில்லன் கதாபாத்திரங்களில் அதிகம் நடித்து வரும் சஞ்சய் தத் குறிப்பிடத்தகுந்த ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார் . தமிழில் சஞ்சய் தத் வில்லனாக நடிப்பது புதிது என்றாலும், இந்தியில் பல படங்களில் பல விதமான வில்லன்களாக  நடித்து அசத்தியிருக்கிறார். சஞ்சய் தத் வில்லனாக நடித்து அவர் மிரட்டிய படங்களைப் பார்க்கலாம்.


கல்நாயக்




1993ஆம் ஆண்டு வெளியான இந்தி திரைப்படம் கல்நாயக். சுபாஷ் காய் இயக்கிய இந்தப் படத்தில் ஜாக்கி ஷ்ராஃப் மாதுரி திக்‌ஷித் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். இந்தப் படத்தில் காவல் துறையிடம் இருந்து தப்பிக்கு பல்ராம் பிரசாத் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சஞ்சய் தத். இன்று வரை அவரது பிரபல வில்லன் கதாபாத்திரமாக இக்கதாபாத்திரம் விளங்குகிறது.


வாஸ்தவ்




1999 ஆம் ஆண்டு வெளியான வாஸ்தவ் திரைப்படத்தை மகேஷ் மஞ்சுரேக்கர் இயக்கியிருந்தார். பிரபல கேங்ஸ்டர் குற்றவாளியான சோட்டா ராஜனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் ரகுநாத் நாம்தேவ் ஷிவால்கர் என்கிற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார்.


அக்னீபாத்




கரண் மல்ஹோத்ரா இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அக்னீபாத். ஹ்ரித்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள இந்தப் படத்தில் கஞ்சா சீனா என்கிற கதாபாத்திரத்தில் கொடூரமான ஒரு வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றி நடித்திருந்தார் சஞ்சய் தத். எத்தனையோ  வில்லன் கதாபாத்திரங்களில்  நடித்திருந்தாலும் இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.


பானிபத்




அஷூதோஷ் கோவாரிகர் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் பானிபத். மராத்திய அரசுக்கும் ஆஃப்கானிய அரசன் அகமத் ஷா அப்தலிக்கும் இடையில் நிகழ்ந்த போரை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட இந்தப் படத்தில் அகமத் ஷா அப்தலி என்கிற ஆப்கானிய மன்னர் கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்திருந்தார்.


கே.ஜி.எஃப்




கன்னட இயக்குநர் பிரஷாந்த் நீல இயக்கத்தில் வெளியான கே.ஜி.எஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் அதீரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார் சஞ்சய் தத். சமீப காலங்களில் ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய வில்லன் கதாபாத்திரங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது அதீரா கதாபாத்திரம்.


லியோ


தற்போது  லியோ திரைப்படத்தில் அந்தோணி தாஸ் என்கிற கதாபாத்திரத்தில் சஞ்சய் தத் நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவரது கதாபாத்திரம் தொடர்பாக பலவிதமான கேள்விகள் இருந்தாலும்  நிச்சயம் இந்த கதாபாத்திரம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.