குழந்தை நட்சத்திரங்கள் என்றாலே மக்களை எளிதில் கவர்ந்து விடுவார்கள். அந்த வகையில் 80ஸ், 90ஸ் காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக அமர்க்களப்படுத்திய துறுதுறுப்பும், துடிதுடிப்பும் மிக்க சுட்டி பையன் தான் மாஸ்டர் சுரேஷ். அந்த காலகட்டத்தில் ஏராளமான முன்னணி நடிகர்களின் குழந்தை பருவத்து நடிகராக நடித்துள்ளார். 


 



தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் அட்டகாசமான நடிப்பு, முக பாவனைகள் மூலம் முத்திரை பதித்து லிட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். அப்படி அவர் நடித்த சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களை பற்றி பார்க்கலாம் :


படிக்காதவன் :


நடிகர் சிவாஜி கணேசன் தம்பியாக நடிகர் ரஜினி நடித்த இப்படத்தில் குழந்தை பருவத்து ரஜினியாக நடித்தவர் தான் மாஸ்டர் சுரேஷ். தன்னுடைய தம்பியை படிக்க வைப்பதற்காக சுமை தாங்கியாக கிடைக்கும் வேலைகளை எல்லாம் செய்யும் பாசமிக்க அண்ணனாக நடித்திருந்தார். 


மௌன கீதங்கள் :


பிரிந்து வாழும் அப்பா பாக்யராஜ் அம்மா சரிதாவின் மகனாக நடித்திருந்தார் மாஸ்டர் சுரேஷ். இப்படத்தில் இடம்பெற்ற 'டாடி டாடி ஓ மை டாடி' பாடல் இன்றும் பிரபலமான பாடல் .


டார்லிங் டார்லிங் டார்லிங் : 


பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ் நடிப்பில் வெளியான இப்படத்தில் குழந்தை பருவத்து பாக்யராஜ் கேரக்டரில் மாஸ்டர் சுரேஷ் நடிக்க, பேபி அஞ்சு பூர்ணிமா பாக்யராஜ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 


 



முந்தானை முடிச்சு :


பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான இந்த ஆல் டைம் ஃபேவரட் படத்தில் ஊர்வசி என்றுமே சில சுட்டியான சிறுவர் பட்டாளத்துடன் சேர்ந்து பல அட்டகாசங்கள் செய்வார். அதில் பாலு என குட்டி பையனாக நடித்திருந்தார் மாஸ்டர் சுரேஷ். 



ரங்கா :


ரஜினிகாந்த் - ராதிகா இணைந்து நடித்த 'ரங்கா' படத்தில் குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் சுரேஷ் நடித்திருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற 'டூத் பேஸ்ட் இருக்கு' என்ற பாடல் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலம். 


கடல் மீன்கள் :


கமல்ஹாசன் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்த கடல் மீன்கள் படத்தில் கமல் - சுஜாதா மகனாக தம்பதியின் மகனாக, குழந்தை பருவத்து கமலாக நடித்திருந்தார் மாஸ்டர் சுரேஷ். 


மை டியர் குட்டிச்சாத்தான் :


குழந்தைகளின் மிகவும் ஃபேவரட் படமான மை டியர் குட்டிச்சாத்தான் படத்தில் பேபி சோனியா, மாஸ்டர் அரவிந்த், மாஸ்டர் சுரேஷ் சுற்றி நகரும் இந்த மாயாஜால கதையில் மழலை பட்டாளத்தில் ஒருவராக நடித்திருந்தார்.