பிரபலங்கள் பலரும் தங்கள் தொழில் வாழ்க்கையையும் தாண்டி, மக்களுக்கு உதவி செய்யும் நிகழ்வுகள் பலவற்றையும் பார்த்திருக்கிறோம். நம்மில் பெரும்பாலானோர் நம் வாழ்நாள் முழுவதும் உழைத்து ஈட்டும் பணத்தைப் பிரபலங்களால் ஒரே படத்தில் பெற்றுவிட முடியும்.. தொலைக்காட்சியில் ஒருமுறை முகம் காட்டினால் அவர்கள் பெறும் சம்பளம் என்பது சராசரி நபர் ஒருவரின் ஆண்டு வருமானத்தை விட அதிகமாக இருக்கக்கூடும். 


ஆனால் ஈகை என்ற அடிப்படையில், உலகம் முழுவதும் பல்வேறு பிரபலங்கள் தங்கள் கொடைத் திறனால் பல மக்களின் வாழ்க்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். 


சிலர் தங்கள் நன்கொடைகளை மத நிறுவனங்களுக்கும், சிலர் பல்வேறு காரணங்களுக்காகவும் வழங்குகின்றனர். மேலும், வரிக் குறைப்பு, ப்ரொமோஷன் முதலான காரணங்கள் மட்டுமின்றி, தன் அறத்தைக் காக்கவும், நல்ல மனிதராக வாழவும் நன்கொடை தரும் பிரபலங்களும் இருக்கின்றனர். 


பல்வேறு சமூகப் பிரச்னைகளுக்காக குரல் எழுப்பும் நிறுவனங்களுக்காக பாலிவுட்டில் பல பிரபலங்களும்  வெளிப்படையாகவே நன்கொடைகள் வழங்கியுள்ளனர். அமிதாப் பச்சன், ஷாரூக் கான், சல்மான் கான் ஆகியோர் பல்வேறு சமூக, பொருளாதார காரணங்களுக்காக கொடை வழங்கியுள்ளனர். 


சில பிரபலங்கள் மரணம் அடைந்த பிறகு, அவர்கள் தங்கள் சார்பாக நன்கொடைகளை விட்டுச் செல்வதும், அவர்களின் குடும்பத்தினர் அவற்றை வழங்கிய நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன. தாங்கள் இறந்த பிறகு, மக்களுக்காக நன்கொடைகளை விட்டுச் சென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ... 


1. சித்தார்த் சுக்லா



இந்தி மொழியின் `பிக் பாஸ் சீசன் 13’ நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற நடிகர் சித்தார்த் சுக்லா கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 2 அன்று இறந்த அவர், முன்பு தன் சொத்துக்களைத் தொண்டு நிறுவனம் ஒன்றின் பெயருக்கு எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சித்தார்த் சுக்லாவின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் ஆகும். 


2. ஸ்ரீதேவி



பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கிய நடிகை ஸ்ரீதேவி மறைவுக்குப் பிறகு, அவரது கணவர் போனி கபூர் அவரது சொத்துகளில் பாதியைத் தொண்டு நிறுவனத்திற்கு அளித்ததோடு, கிராமம் ஒன்றில் சிறிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டி, குழந்தைகளுக்கு இலவசமாக கல்வி வழங்கி வருகின்றார். 


3. இர்ஃபான் கான்



கடந்த 2020ஆம் ஆண்டு, புற்றுநோய் காரணமாக நடிகர் இர்ஃபான் கான் மறைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி சுடாபா சிக்தார் அவரது 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைத் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு வழங்கியுள்ளதாக அறிவித்துள்ளார். 


4. லதா மங்கேஷ்கர்



சமீபத்தில்  தனது 92வது வயதில் பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்தார். 500 கோடி ரூபாய் மதிப்பிலான அவரது சொத்துகள் நன்கொடையாக தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகின. 


5. சுஷாந்த் சிங் ராஜ்புத்



சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 2020ஆம் ஆண்டு மரணமடைந்தது பலருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது. அவர் தன்னுடைய வருமானத்தில் பெறும் பகுதியை எப்போதும் கொடையாக வழங்கி வந்ததாகவும், அவர் மரணமடைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் அவரது சொத்துகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.