பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா ஷூட்டிங் ஒன்றில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் உங்கள் வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்திய சம்பவங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும் என்ற டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய நடிகை விசித்ரா, 2001 ஆம் ஆண்டு டாப் ஹீரோ ஒருவரின் படத்தின் ஷூட்டிங்கின் போது தனக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை பகிர்ந்தார். இது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமின்றி மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த டாப் ஹீரோ, தன்னை ரூமுக்கு வருமாறு அழைத்ததாகவும், தான் வரவில்லை என்பதால் தினமும் குடித்து விட்டு வந்து ரூம் கதவை கட்டுவதை வழக்கமாக கொண்டதாக தெரிவித்தார். அந்த ஷூட்டிங் ஷெட்யூல் முழுக்க நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறையிலும் தங்கினேன். மேலும், இந்த விஷயத்தில் நான் நடந்துக்கொண்ட விதத்தால் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சினை ஏற்பட்டது. காட்சி ஒன்றில் ஃபைட்டர்ஸ் ஒருவர் என் மீது அத்துமீறி நடந்து கொண்டார். நான் சம்பந்தப்பட்ட ஆளை பிடித்து ஸ்டண்ட் மாஸ்டரிடம் புகார் சொன்னபோது, அவர் அப்பிரச்சினையில் என் கன்னத்தில் பளார் என அறை விட்டார்.
எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. உடனடியாக நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் நடிகர் சங்கத்திடம் புகார் அளித்தேன். ஆனால் அவர்களோ போலீசுக்கு செல்லாமல் இங்கு ஏன் வந்தாய் என கேட்டார்கள். மேலும் இதெல்லாம் ஒரு விஷயம்ன்னு எடுத்துகிட்டு இருக்க போய் வேலையை பாரு என அப்போது இருந்த தலைவர் சொன்னது இப்போதும் நியாபகம் இருக்கிறது. நான் சினிமாவை விட்டு விலக அப்பிரச்சினையே காரணமாக அமைந்தது என தெரிவித்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
விசித்ராவின் சினிமா வாழ்க்கை
1992 ஆம் ஆண்டு அவள் ஒரு வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக விசித்ரா அறிமுகமானார். அதே ஆண்டு வெளியான தலைவாசல் படத்தில் ”மடிப்பு” ஹம்சா என்ற கேரக்டரில் கவர்ச்சி கேரக்டரில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி, விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக், பிரபு, விஜய், அஜித் என அன்றைக்கு முன்னணியில் இருந்த ஹீரோக்களின் படங்களில் காமெடி வேடங்களிலும், கவர்ச்சி வேடங்களிலும் நடித்தார்.
இப்படியான நிலையில் விசித்ரா பிக்பாஸ் நிகழ்ச்சியில் சொன்ன 2001 ஆம் ஆண்டு, அவர் நடிப்பில் என் இனிய பொன் நிலாவே, சீறி வரும் காளை, கிருஷ்ணா கிருஷ்ணா உள்ளிட்ட சில படங்கள் வெளியாகியுள்ளது. இதில் ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர். அப்படி இருக்கையில் விசித்ராவை ரூமுக்கு அழைத்தது, படப்பிடிப்பில் தகாத முறையில் நடப்பதற்கு காரணமான அந்த பிரபலம் யார் என்ற கேள்வியே அனைவருக்கும் எழுந்துள்ளது.
இந்நிலையில் விசித்ரா சொன்ன அந்தப்படம் தமிழில் இல்லை என்றும், தெலுங்கில் 2001 ஆம் ஆண்டு வெளியான Bhalevadivi Basu படம் தான் என்பதையும் நெட்டிசன்கள் ஆதாரத்துடன் பகிர்ந்து வருகின்றனர். இந்த படத்தில் ஹீரோவாக பாலகிருஷ்ணாவும், ஸ்டண்ட் மாஸ்டராக விஜய் என்பவரும் பணியாற்றியுள்ளனர்.