தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு இயக்குநராக ஏராளமான வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. திருப்பதி புரடக்ஷன்ஸ் கம்பெனி என்ற நிறுவனத்தின் கீழ் பல படங்களை தயாரித்தும் உள்ளார். உதவி இயக்குநராக இருந்து பின்னர் இயக்குநராக பரிணாமம் எடுத்தவர். ரன், சண்டக்கோழி, பையா என பல ஹிட்களை கொடுத்தவருக்கு அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்ததால் பெரும் நஷ்டத்தை சந்தித்தார். அவர் எதிர்கொண்ட கடுமையான சூழல் குறித்து சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் பேசி இருந்தார். 


 



முயற்சி தான் முக்கியம் :


வெற்றியோ தோல்வியோ இரண்டையுமே நான் சரிசமமாக தான் பார்க்கிறேன். அஞ்சான் படம் வெளியான சமயத்தில் மிக கடுமையான விமர்சனங்களை எதிர் கொண்டேன். எங்கும் தேங்கி விட கூடாது. எந்த சிக்கல் தடங்கல் வந்தாலும் அதை கடந்து சென்று கொண்டே இருக்க வேண்டும். முயற்சி செய்வதை மட்டும் நிறுத்தவே கூடாது என்ற எண்ணம் மட்டும் என்னுடைய மனதில் இருந்து கொண்டே இருந்தது.  நான் மிகவும் கஷ்டப்பட்ட காலத்தில் என்னுடைய நண்பர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்கள். வெற்றிமாறன், விஷால் போன்றவர்கள் எல்லாம் எனக்கு நண்பர்களாக இருக்கும் போது நான் ஏன் கவலைப்பட வேண்டும். 


 



வெற்றிமாறன் சொன்ன அந்த வார்த்தை :


ஒரு நாள் வெற்றிமாறன் எனக்கு போன் செய்து பேசினார். என்னை ஆபிசுக்கு வரச்சொல்லி பேசினார். நான் உங்களுக்கு இந்த நேரத்தில் படம் பண்ணி கொடுத்தா உங்களுக்கு பயன்படுமா? நான் பண்ணட்டுமான்னு கேட்டார். இவ்வளவு பெரிய வார்த்தை எல்லாம் பெரிய ஹிட் இயக்குநராக இருக்கும் போது நான் வெற்றிமாறனுக்காக பேசுவேனா என எனக்கே தெரியாது. அவர் சொன்னது எல்லாம் பெரிய வார்த்தை. இன்னைக்கு கூட அவர் ரெடியா இருக்கார். அதற்காக அட்வான்ஸ் கொடுக்க போன கூட வாங்கமாட்டார். நான் உங்களுக்காக படம் பண்றேன். என்னைக்குனு மட்டும் சொல்லுங்க என சொன்னாரு. அவர் சொன்னது எல்லாம் பெரிய வார்த்தை. இந்த வாழ்க்கையில நான் இது போன்ற நல்ல நண்பர்களை சம்பாதிச்சு வைச்சு இருக்கேன்" என்றார்.


பையா 2:


2010ம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில், கார்த்தி - தமன்னா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பையா' படத்தின் இரண்டாவது பாகத்தை தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் முரளியின் இளைய மகனும், நடிகர் அதர்வா முரளியின் தம்பியுமான ஆகாஷ் முரளி நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. இப்படம் மூலம் மீண்டும் லிங்குசாமி கம்பேக் கொடுப்பார் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.