தானும், குஷி கபூரும் ஒரே நபருடன் டேட்டிங் செய்ததாக கிளம்பிய தகவல் குறித்து நேர்காணல் ஒன்றில் பிரபல நடிகை ஜான்வி கபூர் பதிலளித்துள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான தடக் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்ற அடையாளத்துடன் பல மொழி ரசிகர்களிடம் பிரபலமடைந்த இவர் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரிஸ், ரூஹி, குட் லக் ஜெர்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் மிலி படம் வெளியாகவுள்ளது. சன்னி கௌஷல் மற்றும் மனோஜ் பஹ்வா ஆகியோர் இணைந்துள்ள இப்படத்தை மாத்துக்குட்டி சேவியர் இயக்கியுள்ளார்.
இது 2019 ஆம் ஆண்டு வெளியான மலையாளப் படமான ஹெலனின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். மிலி படம் நவம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் அதுகுறித்த ப்ரோமோஷன்களில் ஜான்வி பிஸியாக உள்ளார். அந்த வகையில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் தன்னைப் பற்றி படித்த மோசமான விஷயத்தை கூறுமாறு அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் எனது சிறுவயது நெருங்கிய நண்பரான அக்ஷத் ராஜனுடன் டேட்டிங் செய்து கொண்டிருந்ததாகவும், பின்னர் அவரை பிரிந்த நிலையில் இப்போது தனது சகோதரி குஷி அவருடன் டேட்டிங் செய்கிறார் என்ற தகவல் பரவியது.
ஆனால் நாங்கள் குழந்தையாக இருந்ததிலிருந்து அக்ஷத் ராஜனுடன் பழகியுள்ளோம். நாங்கள் யாரும் அவருடன் டேட்டிங் செய்யவில்லை. அக்ஷத் எங்களின் சிறந்த நண்பர் என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். மேலும் ஜான்வி எந்தவொரு பிரபலங்களுடன் பரவும் டேட்டிங் குறித்த தகவலை இதுவரை ஒப்புக்கொள்ளவும் இல்லை. மறுத்ததும் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது நண்பரான ஓர்ஹான் அவத்ரமணியுடன் டேட்டிங் செய்தார் என்ற தகவலுக்கும் இதுவரை பதில் இல்லை என்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.