விஜய் தேவரகொண்டாவின் லைகர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியைச் சந்தித்த நிலையில் அவர் அதிரடி முடிவு என்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 






கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியான "லைகர்" திரைப்படம் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. இப்படத்திற்கான விளம்பரம் பெரிய அளவில் நடைபெற்ற நிலையில் காலையில் முதல் காட்சி சென்ற ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.  பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் எழுதி இயக்கிய படமா இது என நொந்துக் கொள்ளும் அளவுக்கு இதன் திரைக்கதை இருந்தது.  லைகர் படத்தில் அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்க  ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய், விஷு ரெட்டி ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். அமெரிக்க குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஒரு கேமியோ ரோலில் லைகர் படத்தில் நடித்திருந்தார். 


சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம்  இதுவரை மொத்தம் 41 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போட்ட பணத்தை எடுப்பது கஷ்டமான விஷயம் என்பதால் லைகர் படம் பெரும்பாலான தியேட்டர்களில் தூக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் தேவரகொண்டாவின் மார்க்கெட் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்தடுத்த படங்களின் நிலைமை என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 






எதிர்பார்த்ததைப் போலவே பூரி ஜெகன்நாத் - விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமான ஜன கன மண சிக்கலில் சிக்கியுள்ளது. இந்நிலையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நஷ்டமடைந்த தயாரிப்பாளர்களுக்கு 6 கோடி ரூபாய் வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'லைகர்' படத்தால் பெரும் நஷ்டத்தை சந்தித்த விநியோகஸ்தர்களுக்கு படத் தயாரிப்பாளர் பூரி ஜெகநாத் இழப்பீடு வழங்கியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.