தற்கால தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் தனது 47வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 






2007 ஆம் ஆண்டு தீபாவளிக்கு தனுஷ் நடித்த பொல்லாதவன் படம் வெளியாகியிருந்தது. அதுவும் அப்போது அவர் வளரும் நடிகர் தான். அதே நாளில் விஜய்யின் அழகிய தமிழ்மகன்,சூர்யாவின் வேல் ஆகிய படங்கள் வெளியான நிலையில் ரசிகர்களின், குறிப்பாக இளைஞர்களின் ஏகோபித்த ஆதரவு பொல்லாதவன் படத்துக்கே இருந்தது. பல்சர் பைக்கும், அதனோட பின்னப்பட்ட கதையும் யார் அந்த இயக்குநர் என்ற கேள்வியை ரசிகர்களுக்கு எழ அங்கே வெற்றிமாறனின் வெற்றிப் பாதை தொடங்கியிருந்தது. 


தமிழ் சினிமாவின் மகத்தான இயக்குநர்களில் ஒருவரான பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வெற்றிமாறன் 2வது படம் எடுக்க 3 ஆண்டுகள் இடைவெளி எடுத்துக் கொண்டார். 2011 ஆம் ஆண்டு மீண்டும் தனுஷ் நடிப்பில் ஆடுகளம் வெளியாகியிருந்தது. இந்த படத்தின் முதல் 20 நாட்கள் ஷூட்டிங் முடிக்கப்பட்டிருந்தது. படம் எப்படி வந்திருக்கிறது என பார்க்கலாம் என்று  45 நிமிட ஃபுட்டேஜ்  ரஃப் கட் செய்யப்பட்டது. அதனைப் பார்த்த ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ச்சியடைந்தது. ஆம் படத்தின் காட்சிகள் ஒன்றிபோகாமல் இருந்ததாகவும், அதனால் தன் வாழ்க்கையே கேள்விக்குறி ஆனதாக நினைத்தேன் என்றும் ஒரு பேட்டியில் வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். ஆனால் காலம் நம் கையில் இருந்தால் எதுவும் சாத்தியம் தான் என்பது போல ஆடுகளம் வெளியாகி ஆறு தேசிய விருதுகளை வென்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவை திரும்பி பார்க்க வைத்தது. 






உதவி இயக்குநராக இருந்த காலக்கட்டத்தில் ஆழ்ந்த வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட வெற்றிமாறன் சந்திரக்குமாரின் லாக்அப் நாவலை விசாரணை என்ற பெயரில் படமாக எடுத்தார். கைது செய்யப்படும் விசாரணை கைதிகள் போலீசாரால் அனுபவிக்கும் கொடுமைகளை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது கிடைக்க வெற்றிமாறன் மீதான மரியாதை இன்னும் அதிகரிக்க தொடங்கியது. 





 

இதன்பிறகு தன்னுடைய நீண்ட நாள் திட்டமான வடசென்னையை கையில் எடுத்தார். ரவுடியிசமும், பின்னால் இருக்கும் சமூக, அரசியல் காரணிகள், மக்களின் வாழ்வியல் தாக்கங்கள் என இந்த படத்தை 3 பாகங்களாக எடுக்க திட்டமிட்டிருந்தார். முதல் பாகம் மட்டுமே வெளியாகி எப்ப அடுத்த பாகம் வெளியாகும் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த படத்திலும் தனுஷ் தான் அவரின் ஹீரோவாக இருந்தார்.

 

அடுத்ததாக எழுத்தாளர் பூமணியின் 'வெக்கை' நாவலை கையில் எடுத்தார். அசுரன் அவதரித்தார். தென் தமிழகத்தில் நிகழும் சாதிக் கொடுமைகள், இதற்கு எதிரான தலித் மக்களின் எழுச்சி என கமர்ஷியல் பேக்கேஜை தனுஷை வைத்து வழங்கினார். பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற இப்படத்தை தொடர்ந்து வாடிவாசல் நாவலை மையமாக கொண்டு சூர்யாவின் வாடிவாசல், விஜய் சேதுபதி சூரியை வைத்து விடுதலை ஆகிய படங்களை இயக்கி வருகிறார். தயாரிப்பாளராகவும் உதயம்  என்.எச்.4.,  காக்கா முட்டை, லென்ஸ் போன்ற வெற்றிப் படங்களையும் இயக்கியிருந்தார். 

 





நாம் கொடுக்கும் படைப்புகளே நம்மை எப்படி என்று இவ்வுலகுக்கு அடையாளப்படுத்தும்.. அந்த வகையில் தனது ஆசான் பாலுமகேந்திராவை போலவே எளிய மனிதர்களின் வாழ்க்கையை படமாக எடுத்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள வெற்றி மாறனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்..!