LGM Trailer Audio Launch: தமிழில் படம் தயாரிக்க தோனி தான் முழுக் காரணம் என  ‘லெட்ஸ் கெட் மேரிட்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவரது மனைவி சாக்‌ஷி தெரிவித்துள்ளார்.


கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனி ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரில் அவர் சென்னை அணியின் கேப்டனாக விளையாடி வருகிறார்.  கிரிக்கெட்டை தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வரும் தோனி தற்போது திரைத்துறையிலும் கால் பதித்துள்ளார். இதற்காக தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் என்ற பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.


இந்த நிறுவனத்தில் முதல் தயாரிப்பாக தமிழ் சினிமாவில்  “Lets Get Married”  என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதில் மோதிரம் ஒன்றிற்குள் நதியா, ஹரிஷ் கல்யாண், இவானா ஆகியோர் இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றது. ஹரிஷ் கல்யாண்,இவானா, நதியா, யோகிபாபு  உள்ளிட்ட பலரும் நடித்துள்ள லெட்ஸ் கெட் மேரிட் படத்தை அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கியுள்ளார். அவரே படத்திற்கு இசையமைத்துள்ளார்.


காதலை மையமாக வைத்த காமெடியான காட்சிகளை கொண்ட படமாக எடுக்கப்பட்டுள்ள “Lets Get Married” படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. தொடர்ந்து படத்தின் முதல் பாடலும் ஜூன் 15 ஆம் தேதி வெளியானது. இப்படியான நிலையில் “Lets Get Married”  படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதற்காக சென்னை வந்த தோனிக்கு நேற்று விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதன் மூலம் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளையாக மாறிப்போனதே தோனி தமிழில் படம் தயாரிக்க காரணம் என சொல்லப்பட்டது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் நிகழ்ச்சியில் அவரின் மனைவி சாக்‌ஷி பேசியுள்ளார். அவர் தனது உரையில், “எங்கள் தயாரிப்பு நிறுவனம் தமிழில் படம் எடுக்க தோனி தான் காரணம். நான் படம் பார்த்து விட்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தின் மூலம் எனக்கு இப்போது சென்னையில் ஒரு குடும்பம் கிடைத்துள்ளது” எனவும் சாக்‌ஷி தோனி கூறியுள்ளார்.