லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
லியோ அப்டேட் வாரம்
விஜய் - லோகேஷ் கனகராஜ் இரண்டாவது முறையாக இணைந்துள்ள லியோ படம் அக். 19ஆம் தேதி வெளியாக உள்ளது. வெளியீட்டுக்கு சுமார் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பட அப்டேட் தொடர்பான எதிர்பார்ப்புகள் நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் எகிறி வருகின்றன.
இந்நிலையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் லியோ படத்தின் புதிய போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது. லியோ தெலுங்கு போஸ்டர் எனத் தெரிவிக்கப்பட்டு இந்த போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், “அமைதியாக இரு, போரைத் தவிர்” (Keep Calm and Avod Battle) எனும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.
வெளியான புதிய போஸ்டர்
இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அடுத்த நான்கு நாள்களுக்கு வரிசையாக லியோ போஸ்டர்கள் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ள நிலையில், இந்த போஸ்டரைப் பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ, “லியோ போஸ்டர்கள் மூலமாக கதைகள் வெளிவரும். பாத்துக்கோங்க” எனவும் தெரிவித்துள்ளது.
அனைத்து போஸ்டர்களும் வெளியானவுடன், லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த 30 நாள்களுக்கும் லியோ படத்தின் அடுத்தடுத்த ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.
இறுதிக்கட்ட ப்ரொமோஷன் பணிகள்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இதற்கான திட்டத்தை தெளிவாக வகுத்துள்ளதாகவும், படக்குழுவும் முழு உற்சாகத்துடன் இதற்காக தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. லியோ படபூஜை தொடங்கியபோதே வெளியீட்டுத் தேதியை அறிவித்து அதற்காக ஒட்டுமொத்த குழுவும் முழுமூச்சாக உழைத்து கடந்த ஜூலை மாத மத்தியில் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
விஜய், த்ரிஷா இருவரும் ஐந்தாம் முறையாகவும் வெகுநாள்களுக்குப் பிறகும் இப்படத்தில் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், சஞ்சய் தத் அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஸ்கின், சாண்டி, ஜோஜூ ஜார்ஜ், மேத்யூ தாமஸ் என மிகப்பெரும் நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
ஏற்கெனவே நா ரெடி பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் லியோ இசை வெளியீட்டு விழாவை எதிர்பார்த்து காத்துள்ளனர்.