தமிழ் திரையுலகின் மிகப்பெரிய நடிகராக உலா வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


விக்ரம் படத்தின் தொடர்ச்சியா? லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் அடங்குமா லியோ? என்று பல்வேறு கேள்விகளுடன் ரசிகர்களின் விறுவிறுப்பை எகிற வைத்துள்ள லியோ படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியானது.


கெட்ட வார்த்தை பேசும் விஜய்:


படத்திற்கு மிகப்பெரிய பலமான விஜய்யுடன் ஆக்‌ஷன் திரில்லர், காஷ்மீரில் படப்பிடிப்பு, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கௌதம் மேனன், திரிஷா என்று மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் உள்ள இந்த படத்தில் ட்ரெயிலர் ஆக்‌ஷன் அதிரடியாகவே வெளிவந்துள்ளது. இந்த ட்ரெயிலரின் ஒரு காட்சியில் நடிகர் விஜய் ஆபாச வார்த்தையில் பேசுகிறார். இது விஜய் ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


தமிழ்நாட்டில் அதிகளவில் குடும்ப ரசிகர்களை கொண்ட நடிகராக உலா வருபவர் விஜய். நடிகர் ரஜினிகாந்தின் படங்களைப் போலவே நடிகர் விஜய்யின் படங்களை குடும்பங்களுடன் மக்கள் சென்று விரும்பி பார்ப்பார்கள். அதற்கு பூவே உனக்காக, மின்சார கண்ணா, நினைத்தேன் வந்தாய், லவ் டுடே, துள்ளாத மனமும் துள்ளும் என விஜய் நடித்த மென்மையான படங்களும் அதில் அவரது கதாபாத்திரங்களும் மிகப்பெரிய காரணம் ஆகும்.


குடும்ப ரசிகர்கள் அதிர்ச்சி:


திருமலைக்கு பிறகு ஆக்‌ஷன் நடிகராக விஜய் அவதாரம் எடுத்தாலும் அவரது மாபெரும் வெற்றி பெற்ற கில்லி, போக்கிரி, காவலன், துப்பாக்கி, தெறி, மெர்சல் ஆகிய படங்களை குடும்பங்கள் ரசிக்கும் அளவிற்கு இருக்கும் வகையிலே தேர்வு செய்து நடித்தார். வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்றதற்கு அது குடும்ப படமாக அமைந்ததே காரணம் ஆகும். லோகேஷ் கனகராஜ் மற்ற இயக்குனர்களை போல அல்லாமல் தனக்கென ஒரு பாணியை தமிழ் சினிமாவில் வைத்துள்ளார்.


இதன் காரணமாக, இவரது இயக்கத்தில் நடிகர் விஜய் ஏற்கனவே நடித்த மாஸ்டர் படமாக அல்லாமல் லோகேஷ் கனகராஜ் படமாக வந்திருக்கும். அதன் காரணமாகவே, அந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படமும் லோகேஷ் கனகராஜ் படமாக வர வேண்டும் என்றே ரசிகர்கள் விரும்புகின்றனர். அதன் எதிரொலியாகவே ட்ரெயிலரும் வெளிவந்துள்ளது.


குழந்தை ரசிகர்கள்:


தமிழ்நாட்டில் அதிகளவு குழந்தைகள் ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முதன்மையானவராக இருப்பவர் நடிகர் விஜய். இவரது படங்களுக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு செல்லும் பெற்றோர்களும், வயதான பெற்றோர்களை அழைத்துச் செல்லும் இளைஞர்களும் ஏராளம். அதற்கு காரணம் விஜய் படத்தை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம் என்ற நம்பிக்கையே ஆகும். அந்தளவிற் முகம் சுழிக்கும் காட்சிகளோ, ஆபாச வார்த்தைகளோ விஜய்க்கு என்று ஒரு பெயர் உருவான பிறகு அவரது படங்களில் இல்லாமல் இருந்தது.


சமீபகாலமாக திரைப்படங்களில் ஆபாசமாக பேசுவது ட்ரெண்டாகி வருகிறது. ஆனாலும், விஜய் போன்ற குடும்பங்கள் கொண்டாடும் நாயகன் படத்தில் கெட்ட வார்த்தை பேசுவது நிச்சயம் குடும்பங்களாக சென்று விஜய் படத்தை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஆகும். பக்கத்து வீட்டுப்பையன், வீட்டில் ஒரு பிள்ளையை போல என தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான குடும்பங்களில் ஒருவராக நடிகர் விஜய்யை ரசிகர்கள் பார்க்கின்றனர்.


நீக்குவார்களா?


விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பொதுப்படையான ரசிகர்களும் தங்களது குடும்பத்துடன் சென்று விஜய் படத்தை பார்க்க விரும்புவார்கள். லியோ படம் லோகேஷ் கனகராஜ் படமாக வந்தாலும், பல ஆண்டுகளாக விஜய் படத்திற்கு என்று உள்ள குடும்ப ரசிகர்கள் அதிருப்தி அடையாத வகையில் இந்த படம் வெளிவர வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


அரசியலுக்கு அச்சாரமிடும் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நற்பணிகளை செய்து வரும் சூழலில், தனது படங்களில் இதுபோன்று முகம் சுழிக்கும் வார்த்தைகளையும் தவிர்த்துவிடுவது சிறப்பாக இருக்கும். ட்ரெயிலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசும் காட்சிக்கு பெரும்பாலும் எதிர்மறை கருத்துக்களே குவிந்து வருவதால், படத்தில் இந்த வார்த்தையை நீக்கிவிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


தமிழ் சினிமாவை பல தரத்திற்கு கொண்டு செல்லும் எந்த இயக்குனருடன் விஜய் இணைந்தாலும், அவருக்கு என்று உள்ள குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படங்கள் இருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு ஆகும்.