லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரத்தம் சொட்ட சொட்ட வெளியாகியுள்ளது 'லியோ' படத்தின் ட்ரெய்லர் (Leo Trailer). ஆடியோ லான்ச் ரத்தானது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதால், ட்ரெய்லருக்கு எதிர்பார்ப்பு எகிறியது. லியோ திரைப்படத்தில் மிகப் பெரிய திரை பட்டாளம் நடிக்கிறது என்ற தகவல் வெளியான நாள் முதல் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 



விஜய்யை ஈசல் கூட்டம் போல தாக்குகிறார்கள் தீய சக்தி கொண்டவர்கள். லியோ தாஸ் யார்? அவரை ஏன் இப்படி வலைவிரித்து தேடுகிறார்கள்? பார்த்திபன் லியோ தாஸாக மாறி பழிவாங்குகிறாரா? இப்படி பல்வேறு கேள்விகளுக்கு இந்த ட்ரைலரை டி கோடிங் செய்தால் மட்டுமே லோகேஷ் கனகராஜின் டச் தெரியவரும். 


அந்த வகையில் ட்ரெய்லரில் கொடூரமான வில்லனாக தெறிக்க விடுகிறார் சாண்டி மாஸ்டர். அவருக்கு போட்டியாக தனது மாஸான வில்லத்தனத்தால் பயமுறுத்துகிறார் நடிகர் அர்ஜூன். சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான் என மாறி மாறி அவர்களின் வெறித்தனத்தை கொப்பளிக்க அவர்களுக்கு மத்தியில் விஜய் தனது அசத்தலான ஆக்ஷன் காட்சிகளால் மிரட்டியுள்ளார்.


சீரியல் கில்லர் என சொல்லப்படும் அந்த வில்லன் யார் என்பது சஸ்பென்சாக இருக்கிறது. படத்தில் ஏகப்பட்ட வில்லன்கள் வெவ்வேறு திசையில் இருந்து கிளம்பி வந்து தாக்கும் காட்சிகள் ட்ரைலரில் தெறிக்கிறது. வில்லன்கள் ஒரு புறம் என்றால் கழுதைப் புலியின் காட்சிகள் மிரள வைக்கின்றன.


 



துணிச்சலான போலீஸ் அதிகாரியாக கௌதம் மேனன் தனது கடமையை சிறப்பாக செய்கிறார். மலையாள நடிகரான மேத்யூ தாமஸ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சஞ்சய் தத் பிளாஷ்பேக் ஸ்டோரி ஒன்றில் தொடரும் பகை தொடர்கிறது. 


பார்த்திபனாக நடிக்கும் விஜய்யின் மனைவியாக த்ரிஷா இந்த கலவரமாக சூழலில் எப்படி தன்னுடைய வாழ்க்கையை ஓடி ஒளிந்து கடத்தப் போகிறாள் என்ற பயத்தை கண்களாலே வெளிப்படுத்துகிறார். விஜய்யை சுற்றிலும் ஒரே ஆக்ஷன் காட்சிகளால் நிரம்பியுள்ள இந்த ட்ரெய்லர் படத்தை வேற லெவலில் எடுத்து சென்றுள்ளது. 


ஒரு வில்லன் என்றாலே படத்தில் எக்கச்சக்கமான ஆக்ஷன் இருக்கும். ஆனால் லியோ படம் முழுக்க முழுக்க வில்லன்களால் நிரம்பி வழிகிறது. அப்படி இருக்கையில் ஆக்ஷனுக்கு பஞ்சமேது? அனிருத் இசையில் பின்னணி இசை தாறுமாறாக இருக்கிறது. ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் இரட்டை கதாபாத்திரமா என்ற யூகிக்கவைத்துள்ளது. 


மேலும் ப்ரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோரது காட்சிகளும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள நிலையில், ஜோஜூ ஜார்ஜ் நடிகர்கள் சில நடிகர்கள் பற்றிய தகவல் சஸ்பென்சாகவே உள்ளது. லியோ திரைப்படம் வெளியாக மிகக் குறைந்த நாட்களே இருப்பதால் தற்போது வெளியாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை வேற லெவெலில் எடுத்து சென்றுள்ளது. லோக்கியின் இந்த வெறித்தனமான ஆட்டத்தை காண ரசிகர்கள் ரெடி!