லியோ படத்தின் வெற்றி விழாவில் பேசிய நடிகர் விஜய், பிரபலங்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் குறித்து பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது. 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் 2வது முறையாக இணைந்த படம் ‘லியோ’. செவன் ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்த இப்படம் கடந்த அக்டோபர் 19  ஆம் தேதி வெளியானது. லியோவில் த்ரிஷா,  கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி, மாயா கிருஷ்ணா, வையாபுரி, அனுராக் காஷ்யப், இயக்குநர் ராமகிருஷ்ணன், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர்  மிஷ்கின், அர்ஜூன், ஜனனி, சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். 


லியோ படம் ரூ.540 கோடி வசூலைப் பெற்றுள்ள நிலையில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில் அப்படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று (நவம்பர் 1) பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், வழக்கம்போல ரசிகர்களுக்கு குட்டிக்கதை சொல்லி அசத்தினார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் தான் களமிறங்க உள்ளதையும் சூசகமாக “கப்பு முக்கியம் பிகிலு” என தெரிவித்தார். தொடந்து பேசிய அவர் பிரபலங்களுக்கு வழங்கப்படும் பட்டங்கள் குறித்து பேசினார். 






அப்போது, ‘இந்த கேள்விக்கு நான் ஏற்கனவே பலமுறை பதில் சொல்லிட்டேன். இந்த மேடையில இதை நான் சொல்லியே ஆக  வேண்டும். தமிழ் சினிமா நமக்கு கொடுத்திருக்கிற நட்சத்திர நாயகர்கள் ‘புரட்சி தலைவருன்னா அது ஒருத்தர் தான், நடிகர் திலகம்ன்னா அது ஒருத்தர் தான், புரட்சிக்கலைஞர் என்றால் அது ஒருத்தர் தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருத்தர் தான், உலகநாயகன் என்றால் அது ஒருத்தர் தான், தல என்றால் அது ஒருத்தர் தான்.. அதேபோல் தளபதிக்கு அர்த்தம் தெரியும்ல?.. மன்னருக்கு கீழே அவர் இருப்பாரு..மன்னர்கள் ஆணையிடுவதை அவர்கள் நிறைவேற்றுவார்கள். என்னை பொறுத்தவரை மக்களாகிய நீங்கள் தான் என் மன்னர்கள். நான் உங்களுக்கு கீழே இருக்கிற இருக்குற தளபதி.நீங்க ஆணையிடுங்க நான் செஞ்சிட்டு போறேன்” என தெரிவித்தார். 


இதன்மூலம் சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கு விஜய் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற கருத்து தமிழ் சினிமாவில் மேலோங்கி வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாது பிரபலங்களும் அவரை அடுத்த சூப்பர் ஸ்டார் என சொல்லி வருவது ரஜினிகாந்த் ரசிகர்கள் கொந்தளிப்பில் ஆழ்த்தியது. சமூக வலைத்தளங்களில் விஜய், ரஜினி ரசிகர்கள் கருத்து மோதலில் ஈடுபட்டனர். விஜய் தான் என்றுமே தளபதி தான் லியோ விழாவில் வெளிப்படையாகவே சொல்லி விட்டார். இனிமேலாது ரசிகர்கள் திருந்த வேண்டும் என்பதே இணையவாசிகள் எண்ணமாக உள்ளது.