லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் பங்கேற்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.


கடந்த அக்.19ஆம் தேதி வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் 12 நாள்களைக் கடந்து நல்ல வசூலை ஈட்டி வருகிறது.


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  இரண்டாம் முறை விஜய் இணைந்த நிலையில், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மிஸ்கின், சாண்டி, பிரியா ஆனந்த், மடோனா செபஸ்டியன், ஜனனி, மேத்யூ தாமஸ் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தனர். அனிருத் இப்படத்துக்கு இசையமைத்த நிலையில்,  பாடல்களும் பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்றன.


இந்நிலையில், இன்று காலை லியோ படம் 12 நாள்களில் வசூலித்த தொகை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதன்படி  லியோ படம்  இதுவரை ரூ.540 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதனிடையே பட வெளியீட்டுக்கு முன் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு பின் யாரும் எதிர்பார்த்திரா வகையில் ரத்தானது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்த விழா ரத்தான நிலையில், நடிகர் விஜய்யின் வழக்கமான குட்டி ஸ்டோரி, அவரது மாஸான வருகை என அனைத்தும் இல்லாமல் போனது விஜய் ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தியது.


இந்நிலையில் தற்போது படம் வெளியாகி நல்ல வசூலைக் குவித்துள்ளதால் வெற்றி விழா நடைபெறும் என கோலிவுட் வட்டாரங்களில் கடந்த சில நாள்களாக தகவல்கள் வெளியாகி வந்தன.


அதன்படி, செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம், வெற்றி விழா நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு காவல்துறையிடம் அனுமதி கேட்டதாகவும் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். தொடர்ந்து, லியோ படத்தின் வெற்றிவிழாவுக்கு காவல் துறை பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.


இதனிடையே வெங்கட் பிரபுவுடன் விஜய் கைகோர்த்துள்ள தளபதி 68 படத்துக்காக மொத்த படக்குழுவும் பாங்காங் சென்றுள்ளதாகவும், இதனால் விஜய் இந்த நிகழ்வில் பங்கேற்பது சந்தேகம்தான் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகி வந்தன.


இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 7 ஸ்க்ரீன் நிறுவனம் தற்போது பதிவிட்டுள்ளது. அதன்படி, “தளபதியோட குட்டி ஸ்டோரி இல்லாம எப்டி நண்பா? லியோ சாரி, பார்த்திபனோட மொத்த குடும்பம், படக்குழு உங்களுக்காக வராங்க.. லியோவின் கர்ஜனை.. ப்ளடி ஸ்வீட் வெற்றி. இந்த வாட்டி மிஸ் ஆகாது” எனப் பதிவிட்டுள்ளது. 


 






லியோ தயாரிப்பு நிறுவனம் இந்தப் பதிவுடன் வீடியோ ஒன்றையும் பகிர்ந்துள்ள நிலையில் இணையத்தில் இந்தப் பதிவு லைக்ஸ் அள்ளி வருகிறது.