விஜய் நடித்து வெளியாக இருக்கும் லியோ (Leo) திரைப்படத்தில் 'நான் ரெடி தான் வரவா..' என்ற பாடலுக்கு நடனம் ஆடிய நடனக் கலைஞர்களுக்கு முறையான ஊதியம் வழங்கவில்லை என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


விஜய் நடித்து வெளியாக இருக்கும் லியோ திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தில் ‘நான் ரெடி தான் வரவா..’ என்ற பாடலுக்கு நடிகர் விஜய்யுடன் இணைந்து 1200க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள்  நடனம் ஆடினர். 


இந்தப் பாடலுக்கான நடனக்காட்சி ஈ.சி.ஆர் சாலையில் உள்ள ஆதித்யாராம் மைதானத்தில் கடந்த ஜூன் மாதம் படமாக்கப்பட்டது. நடிகர் விஜய்யுடன் ஆடிய நடனக் கலைஞர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.


 பாடலுக்கான நடனத்தை அமைத்துக் கொடுத்தவர் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஆவார். கடந்த ஜூன் மாதம் படமாக்கப்பட்டதற்கு ஊதியம் வழங்கப்படாததை அடுத்து கடந்த சில தினங்களாக நடனக் கலைஞர்கள் சார்பில் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரின் ஸ்டுடியோவில் முறையிட்டுள்ளனர். 


அதற்கு ஊதியம் நேற்று முன் தினம் ஒரு சில கலைஞர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் ஊதியமாக கொடுப்பதாகக் கூறப்பட்ட நிலையில், வெறும் 1000 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டது. பாடலுக்கான காட்சி 6 நாட்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டதால் தலா 24 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் ஆனால் தயாரிப்பு நிறுவனம் 6 ஆயிரம், 3 ஆயிரம் என வழங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.


 இது குறித்து செவன் ஸ்கிரின் ஸ்டுடியோ நிறுவனத்தில் முறையிட்டபோது டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் கேளுங்கள் எனக் கூறியுள்ளனர். இதனை அடுத்து டான்ஸ் மாஸ்டர் தினேஷிடம் தாங்கள் கேட்ட போது தனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமில்லை என்று கூறி அழைக்கழித்துள்ளார்.


இந்நிலையில், இதுகுறித்துப் பேசியுள்ள நடனக் கலைஞர்கள், “சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று  நாங்கள் புகார் அளித்தோம், அங்கும் தங்களது காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதி இல்லை நடன சங்கம் இருக்கும் தி.நகர் காவல் நிலையத்திற்கு செல்லுங்கள் எனக் கூறி அழைக்கழிக்கின்றனர்.


இதனை அடுத்தே சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தோம், இங்கும் எங்களது புகாரை எடுத்துக் கொள்ளாமல் மீண்டும் மாம்பலம் காவல் நிலையத்திற்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்” எனக் கூறியுள்ளனர்.