லியோ திரைப்படத்தில் பிரபல மலையாள நடிகை இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் படப்பிடிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாம் முறையாக விஜய் இணைந்துள்ள லியோ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. படம் பற்றிய எதிர்பார்ப்புகள் எகிறி வரும் நிலையில் வாரம் இரண்டு அப்டேட்களாவது வந்து விடுகின்றன. அந்த வகையில், தற்போது மலையாள நடிகை ஒருவர் லியோ படத்தில் இணைவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
ஜோஜூ ஜார்ஜ் வரிசையில் மற்றொரு நடிகை
திரிஷ்யம் 2 படத்தில் நடித்த நடிகையான சாந்திமாயாதேவி முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் ஃபோட்டோ பகிர்ந்த நிலையில் அவர் லியோ படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே லியோ படத்தில் பிரபல மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இணைந்ததாகத் தகவல் வெளியானது . ஜோஜூ ஜார்ஜ் ஏற்கனவே தனுஷின் ஜெகமே தந்திரம் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.
இந்நிலையில், விஜய்யின் மலையாள ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களை மனதில் கொண்டு பிரபல மலையாள நடிகர்கள் படத்தில் கமிட் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சாந்தி மாயாதேவி லோகேஷ் கனராஜ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
வைரலான த்ரிஷா - விஜய் ஃபோட்டோ
முன்னதாக நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள் பரிசாக விஜய்யுடன் லியோ பட செட்டில் அவர் இணைந்திருக்கும் ஃபோட்டோ படக்குழு சார்பில் பகிரப்பட்ட நிலையில் இந்த ஃபோட்டோ வைரலானது.
சென்னை, பிரசாத் ஸ்டுடியோவில் தற்போது லியோ இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், பேக்கரி போன்ற செட்டில் விஜய்யும் த்ரிஷாவும் இணைந்திருக்கும் இந்தப் புகைப்படம் வெளியாகி இணையத்தில் லைக்ஸ் அள்ளியது. மேலும், விஜய் - த்ரிஷாவின் டூயட் பாடல் பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. மேலும் லியோ ஷூட்டிங்குக்காக சஞ்சய் தத் சென்னை வரவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
நட்சத்திர பட்டாளங்கள்:
அதேபோல் சென்ற வாரம், விஜய்யுடன் சிங்கம் ஒன்று லியோ படம் முழுவதும் பயணிக்க உள்ளதாகவும், அவரது கதாபாத்திரத்தை பிரதிபலிக்க இந்த சிங்கம் அனிமேஷன் மூலம் உருவாக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. நடிகர்கள் அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த்,மிஷ்கின், மேத்யூ தாமஸ், கவுதம் மேனன், சாண்டி எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.
செவன் ஸ்க்ரீன் பேனரில் லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். லியோ திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.