லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் நாளை அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாக இருக்கிறது, இந்நிலையில் லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்தான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
விஜய் படம் என்றாலே பிரச்சனைதான்
நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் வரிசையாக சர்ச்சைக்கு உள்ளாவது குறித்த கேள்விக்கு “பொதுவாகவே நடிகர் விஜய் படம் என்றாலே அதை வைத்து ஏதாவது ஒரு சர்ச்சை உருவாகிறது. நான் மாஸ்டர் படத்தின்போதே இந்த சிக்கலை சந்தித்திருக்கிறேன். சமீபத்தில் வெளியான லியோ படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற ஒரு வசனத்திற்காக கூட சர்ச்சை உருவானது. ஆனால் இந்த வசனத்திற்கு பதிலாக வேறு ஏதாவது வசனம் இருந்தாலும் நிச்சயம் அதை வைத்தும் ஏதாவது ஒரு சர்ச்சை உருவாகி இருக்கும்” என்று லோகேஷ் கனகராஜ் பதிலளித்தார்.
மாஸ்டர் , லியோ..
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் விஜய்யுடன் கூட்டணி அமைப்பது எந்த மாதிரியான அனுபவமாக இருக்கிறது என்கிற கேள்விக்கு “லியோ படம் உருவாவதற்கான காரணமே மாஸ்டர் தான். மாஸ்டர் படத்தின் வெற்றியைப் பார்த்த பின்னர்தான் நடிகர் விஜய் லியோ படத்தையும் இயக்கும் வாய்ப்பை எனக்கு கொடுத்தார். மாஸ்டர் படம் 50 சதவீதம் என்னுடைய படமாக இருந்தது தற்போது லியோ படத்தை முழுக்க முழுக்க என்னுடைய ஸ்டைலில் எடுப்பதற்கு விஜய் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அதற்கு அவருக்குதான் நன்றி சொல்ல வேண்டும். அதைத்தாண்டி முந்தைய படத்திற்கும் இப்போதும் எங்களுக்கு இடையிலான புரிதல் இன்னும் மேம்பட்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்” என்று லோகேஷ் கூறினார்.
குடும்பப்படம்னு நினைச்சா மாட்டிப்பீங்க
பொதுவாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்கள் வன்முறைக் காட்சிகளும் , போதைப் பொருட்களை மையப்படுத்திய கதைக்களங்கள்தான் அதிகம் இடம்பெறுகின்றன. விஜய் மாதிரியான ஒரு பெரிய நடிகரை வைத்து லியோ மாதிரியான ஒரு பெரிய படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ் ட்ரெய்லரின் இடம்பெற்ற அந்த ஒரு ஆபாச வார்த்தையை ஏன் தவிர்க்கவில்லை என்கிற கேள்வி எழுப்பப்பட்டபோது “போதைப் பொருட்களை ஆதரித்து என்னுடையப் படங்களில் நான் சித்தரிப்பது இல்லை. அந்த போதை பொருட்கள் இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்கத்தான் என்னுடைய படங்களின் கதாநாயகர்கள் போராடுகிறார்கள். படத்தில் விஜய் அந்த ஆபாச வார்த்தையை பேசும் காட்சிக்கும் முழு பொறுப்பையும் நானே எடுத்துக் கொள்கிறேன். அந்த சூழ்நிலைக்கு அப்படியான ஒரு வசனம் தேவைப்பட்டதால்தான் நான் அதை வைத்தேன். அதுவும் குழந்தைகள் அதிகம் இதனை பார்க்க வாய்ப்பிருப்பதால் அந்த வசனத்தை ம்யூட் செய்துவிட்டோம் திரையரங்கத்திலும் அந்த வசனம் வராது.
காதல் , ஹாரர் , ஆக்ஷன் இந்த மாதிரியான சினிமா ஜானரில் அதிகம் விற்கப்படும் ஒரு ஜானர் ஆக்ஷன். நான் என்னுடைய சின்ன வயதில் இருந்து ஹாலிவுட் ஆக்ஷன் திரைப்படங்களைப் பார்த்துதான் வளர்ந்திருக்கிறேன். இந்தப் படங்களை நான் வன்முறை என்று சொல்லமாட்டேன். அவற்றை ஆக்ஷன் என்று நான் சொல்லுவேன். லியோ திரைப்படத்தை ஆக்ஷன் திரைப்படம் என்று தெரிந்து வரும் ரசிகர்கள் அந்த படத்தை ரசித்து பார்க்கலாம். ஆனால் அது தெரியாமல் குடும்ப படம் என்று நம்பி வந்தார்கள் என்றால் அப்போ மாட்டிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது” என்று லோகேஷ் கனகராஜ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.