லியோ


விஜய்  நடித்திருக்கும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. த்ரிஷா, அர்ஜூன், கெளதம் மேனன் என பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்தப் படத்தில் அந்தோணி தாஸ் என்கிற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


சமீபத்தில் வெளியான லியோ படத்தின் ட்ரெய்லரில் கொடூரமான ஒரு வில்லனாக அவரது கதாபாத்திரம் இருக்கும் என்பது தெரிகிறது. லியோ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முறையாக அடியெடுத்து வைக்கும் சஞ்சய் தத் உடன் வேலை செய்வதற்கு முன், தனக்கு அவரைப் பற்றி வேறு ஒரு அபிப்பிராயம் இருந்ததாகவும் படபிடிப்பின்போது இருவருக்கும் இடையில் தந்தை மகன் மாதிரியான ஒரு உறவு ஏற்பட்டதாகவும் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார் லோகேஷ்.


சஞ்சய் தத்


சஞ்சய் தத் குறித்து பேசும்போது லோகேஷ் கனகராஜ் “பாலிவுட்டில் கிட்டத்தட்ட 270 படங்களில் சஞ்சய் தத் நடித்திருக்கிறார். கே.ஜி.எஃப் படத்தில் அவரது நடிப்பை நாம் பார்த்தோம். தமிழில் லியோ தான் அவருக்கு முதல் படம். அவருடை பேட்டிகள் மற்றும் பொதுவெளியில் அவரைப் பார்த்ததை வைத்து எனக்கு அவர் மேல் ஒரு அபிப்பிராயம் இருந்தது.


அவர் இப்படிதான் இருக்கப் போகிறார். எக்கச்சக்கமான படங்களில் அவர் நடித்திருக்கிறார் என்பதால் முடிந்த அளவுக்கு சின்ன தவறுகூட நடந்துவிடாமல் நான் கவனமாக இருக்க வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். லியோ படத்தின் கதையை அவரிடம் சொன்னபோது இந்தக் கதையில் அவர் நடிப்பை வெளிப்படுத்துவதற்காக நிறைய சாத்தியங்கள் இருப்பதை புரிந்துகொண்டு சம்மதித்தார்” என்று கூறினார்


சுதந்திரமாக வேலை செய்தேன்


மேலும் அவர் தொடர்கையில் “சஞ்சய் தத் உடன் நான் எந்த அளவிற்கு சுதந்திரமாக வேலை செய்தேன் என்றால் என்னுடைய முதல் படமான மாநகரம் படத்தில் ஸ்ரீ மற்றும் சந்தீப் உடன் வேலை செய்வதைப் போல் எளிமையாக இருந்தது. படத்திற்கான டப்பிங்கில் அவர் அதிக கவனம் எடுத்துக் கொண்டார்.


சில நாட்களில் இரவு 3 மணிவரை ஒவ்வொரு வசனத்தையும் பேசி அதை எனக்கு அனுப்பி வைத்து சரியாக இருக்கிறதா என்று கேட்பார். மேலும் நாட்கள் செல்ல செல்ல என்னை அவருடைய மகன் என்று கூப்பிடத் தொடங்கிவிட்டார். என்னையும் அவரை அப்பா என்று கூப்பிடச் சொன்னார். கமல்ஹாசன் மற்றும் விஜய்யுடன் எனக்கு  இருக்கும் உறவைப் போல் சஞ்சய் தத் உடனும் மனதுக்கு நெருக்கமான உறவு எனக்கு ஏற்பட்டுள்ளது” என்று லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.


லியோ சிறப்புக் காட்சிகள்


அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கும் லியோ திரைப்படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் உற்சாகமாகக் காத்துள்ளனர். படம் வெளியாகி முதல் ஐந்து நாள்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கி இறுதிக்காட்சி இரவு 1: 30 மணியளவில் முடிக்கப்படவேண்டும் என்கிற அரசின் உத்தரவிற்கேற்ப காட்சிகள் திரையிடப்பட இருக்கின்றன.