சினிமாவில் நிறைய நாட்கள் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சினிமா மீது காதல்


வங்கி பணியில் இருந்து சினிமா மேல் இருந்த காதலால் அந்த பணியை விட்டுவிட்டு திரையுலகிற்குள் நுழைந்தவர் ‘லோகேஷ் கனகராஜ்’. குறும்படங்கள் வாயிலாக கிடைத்த அனுபவத்தைக் கொண்டு ‘மாநகரம்’ படத்தை இயக்கி சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் ரசிகர்களிடையே கவனத்தைப் பெற்றது. தொடர்ந்து கார்த்தியுடன் ‘கைதி’, விஜய்யுடன் ‘மாஸ்டர்’, கமல்ஹாசனுடன் ‘விக்ரம்’ என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக லோகேஷ் மாறிவிட்டார். 


மீண்டும் விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ் 


லோகேஷ் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து, லியோ படத்தை இயக்கி வருகிறார். இந்த கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதுமட்டுமல்லாமல் படமானது அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தில் இருந்து ‘நா ரெடி’ பாடல் வெளியாகவுள்ளது. இதனிடையே ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ள லோகேஷ் கனகராஜ் தனது சினிமா பயணம் குறித்தும், லியோ படம் குறித்தும் பேசியுள்ளார். 


அந்த நேர்காணலில் லோகேஷ் கனகராஜ், “நான் கடந்து வந்த பாதையை தினமும் நினைத்து பார்ப்பது இல்லை. சொல்லப்போனா பெருசா ஒன்னுமே வித்தியாசம் இல்லை. தொடர்ந்து 6 மாதங்களாக லியோ ஷூட்டிங் சென்றுக் கொண்டிருக்கிறது. தலை சீவக்கூட நேரம் இல்லை. நான் ரொம்ப பிடிச்சி வந்த சினிமாவுல பெயரும், புகழும் கிடைக்கிறது. அதனால் ரொம்ப பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தோன்றுகிறது. நான் நிறைய பேட்டியில் சொன்னது போல எனக்கு வெற்றியில் கிடைக்கும் சந்தோஷத்தை விட, தோல்வியை கண்டு எழும் பயம் அதிகம். குறும்படத்தில் தொடங்கிய எங்கள் குழுவில் 75% பேர் இன்றும் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். 


சினிமாவில் இருந்து வெளியேறி விடுவேன்


அடுத்ததாக லியோ படம் பற்றி கேட்ட கேள்விக்கு, நான் ஸ்டாப்பா லியோ ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறது. நிறைய நடிகர்கள் இருப்பதால் அவர்களின் கால்ஷீட்டை வீணாக்கக்கூடாது என தொடர்ந்து ஷூட்டிங் சென்று கொண்டிருக்கிறது என லோகேஷ் கூறினார். இதனையடுத்து, “LCU திட்டம் பற்றியும், 20 ஆண்டுகளுக்கு பிளான் இருப்பதாக சொல்கிறார்களே?”என்பது பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது.  அதற்கு, “எனக்கு நிறைய படங்கள் பண்ண வேண்டும். நிறைய நாட்கள் சினிமாவில் இருக்க வேண்டும் என்கிற திட்டம் எல்லாம் என்னிடம் இல்லை. என்னிடம் 20 ஆண்டுகளுக்கு எல்லாம் திட்டம் எதுவும் இல்லை. நான் ஒரு 10 படம் பண்ணி விட்டு சினிமாவில் இருந்து வெளியேறி விடுவேன்” என அவர் தெரிவித்துள்ளார்.