லியோ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் ரத்னகுமார் பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவர் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்த லியோ படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியானது. இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ள நிலையில், வசூலில் ரூ.540 கோடியை பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ படத்துக்கு வசனம் எழுதியவர் இயக்குநர் ரத்னகுமார். இவர் மேயாத மான், ஆடை, குலு குலு ஆகிய 3 படங்களை இயக்கியுள்ள நிலையில், ரசிகர்களிடையே மிகப்பிரபலமான ஒருவராக ரத்னகுமார் உள்ளார். 


அதற்கு காரணம் லியோ படத்தின் அப்டேட்டுகளை ஒவ்வொன்றாக அவர் தான் முதலில் தெரிவிக்க தொடங்கினார். ரத்னகுமாருக்கென்று தனி ரசிகர் கூட்டமே உருவானது. அவர் என்ன போஸ்ட் போட்டாலும் அது ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. ஒரு கட்டத்தில்  லியோ படத்தின் பாதியை அவர் தான் இயக்கினார் என்றெல்லாம் பேசப்பட்டது. மேலும் படத்துக்கு எதிர்மறையான விமர்சனம் எழுந்தபோது, சமூக வலைத்தளத்தில் அப்படிப்பட்ட விமர்சனங்கள் சொன்னவர்களுக்கு பதிலடியும் கொடுத்தார். இப்படியான நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா நேற்று (நவம்பர் 1) சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது.






இந்நிகழ்ச்சியில் பேசிய ரத்னகுமார், ‘தனக்கு சினிமா ஆசை வர காரணமே விஜய் தான் என்றும், அவரின் வாழ்க்கை மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் எனவும் புகழ்ந்து தள்ளினார். தொடர்ந்து பேசிய அவர், விஜய் எல்லோரையும் சமமாக தான் நடத்துவார் என கூறிவிட்டு எல்லாத்தையும் தாண்டி எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும்’ என ஒரு வார்த்தையையும் சொன்னார். அவ்வளவு தான் சமூக வலைத்தளங்கள் ஃபயர் மோடில் கொதிக்க தொடங்கியது. 


ஏற்கனவே ஜெயிலர் ஆடியோ விழாவில், ரஜினிகாந்த் ‘காக்கா - கழுகு’ கதை ஒன்றை சொன்னார். அதில் காக்கா என நடிகர் விஜய்யை குறிப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. அந்த கதையில் ரஜினி, ‘கழுகு பறக்கும் உயரத்துக்கு என்ன முயற்சித்தாலும் காகம் பறக்காது. அப்படி வாழ்க்கையில நாம் எதைப் பற்றியும் யோசிக்காமல் இலக்கை நோக்கி சென்றால் முன்னேறி விடலாம்’ என சொன்னார். ரத்னகுமாரோ, ‘எவ்வளவு உயர பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தான் ஆக வேண்டும்' என சொன்னார். ஆக இரண்டையும் கலந்துக்கட்டி ரத்னகுமார் மீது விமர்சனம் கடுமையாக எழுந்தது. 


குறிப்பாக இப்படி ஒரு கருத்தை தன் முன்னாடி சொல்ல விஜய் அனுமதி அளித்திருக்க கூடாது என பலரும் தெரிவித்தனர். இந்த நிலையில் ரத்னகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘எழுத்து பணி உள்ளதால் நான் ஆஃப்லைனுக்கு செல்லவுள்ளேன். என்னுடைய அடுத்த படத்திற்கான அறிவிப்பு வரும் வரை சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிது காலத்திற்கு இடைவெளி எடுக்க போகிறேன்.  விரைவில் சந்திப்போம்’ என தெரிவித்துள்ளார். ஆனால் லியோ பட வெற்றி விழாவில் பேசிய கருத்துக்கு எழுந்த எதிர்ப்பு தான் அவர் சோசியல் மீடியாவில் இருந்து வெளியேற காரணம் என பலரும் தெரிவித்துள்ளனர்.