தீபாவளி பண்டிகைக்கு அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் நாகர்கோயில் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


பொதுவாக பண்டிகை காலங்களில் வெளியூரில் வசிக்கும் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் அந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இவ்வாறு பயணப்படும் மக்கள் கூட்டத்தால் பேருந்து, ரயில் நிலையங்கள் திண்டாடும். இதில் பெரும்பாலும் பொதுமக்கள் ரயில் போக்குவரத்தையே விரும்புவார்கள். பாதுகாப்பு ஒரு காரணமாக இருந்தாலும்  டிக்கெட் கட்டணம் குறைவு, சௌகரியமான பயணம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரயிலில் பயணம் மேற்கொள்ள நினைப்பார்கள். 


ஆயுதபூஜை, நவராத்திரி கொண்டாட்டம், தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் தான். பொங்கல் வரை இந்த பண்டிகைக் கால கொண்டாட்டங்கள் தொடரும். இதனால், சொந்த ஊர்களுக்கு மக்கள் அடிக்கடி பயணம் செய்து வருவது வழக்கம். இதனால், ரயில்களில்  டிக்கெட் கிடைக்காமல் லட்சக்கணக்கான பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் பயணிகளின் சிரமத்தை போக்க நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.  


இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தீபாவளி மற்றும் சாத் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் 283 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. 282 சிறப்பு ரயில்களில் 4,480 பயணங்கள் மேற்கொள்ள உள்ளது. பண்டிகை காலங்களில் ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல்  ஆர்பிஎஃப் அதிகாரிகள் பணியில் இருப்பார்கள்.  ரயில்கள் சீராக இயங்குவதை உறுதி செய்வதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் அவசரகாலப் பணியில் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர், “  என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


அதன்படி தமிழ்நாட்டிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை முதல் நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தரப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் 120 நாட்களுக்கு முன்னே டிக்கெட் முன்பதிவு முடிந்து விட்டது. இதனால் ஊருக்கு செல்ல பயணம் மேற்கொள்ள நினைக்கும் மக்கள் டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற காரணத்தால் மக்கள் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.


அந்த வகையில் மக்கள் எந்த சிரமமுமின்றி பயணம் மேற்கொள்ள சென்னை முதல் நாகர்கோவில் வரை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் - தாம்பரம் இடையே (நவம்பர்  5,12,19,26) ஆகிய 4 நாட்களில் நாகர்கோவிலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில்(06012) மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு சென்னை வந்தடையும்.


பின் சென்னை தாம்பரம் முதல் நாகர்கோவில் வரை காலை 8.05 மணிக்கு புறப்படும் ரயில் அன்று இரவு 8.45 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக செல்லும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று (நவம்பர் 2 ஆம் தேதி) காலை 8 மணிக்கு தொடங்கும் என தென்னக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.