இந்திய திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமைகளில் ஒருவராக திகழ்பவர் பாடகி பி.சுசீலா. 1953ம் ஆண்டு முதன்முறையாக திரைப்பட பின்னணி பாடகியாக அறிமுகமான இவர், இதுவரை 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
வீடு திரும்பினார் பி.சுசீலா
இந்த நிலையில், பி.சுசீலாவிற்கு திடீரென கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. வயது மூப்பு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டினர்.
இந்த சூழலில், மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக பி.சுசீலாவின் உடல்நலம் தேறியது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். தான் வீடு திரும்பியது தொடர்பாக பி.சுசீலா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
அதில், அவர் தற்போதுதான் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளேன். நலமுடனும், மகிழ்ச்சியுடனும் உள்ளேன். நான் குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி. கடவுளை நம்பியவர்கள் கைவிடப்படமாட்டார்கள் என்று அவர் பேசியுள்ளார்.
உடல்நலம் தேறி பி.சுசீலா வீடு திரும்பியது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பெரும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, ஏ.ஆர்.ரஹ்மான் என பலரது இசையிலும் பாடியுள்ளார். இவர் பாடிய பல பாடல்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற பாடல்கள் ஆகும்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், சிங்களம், வங்காள மொழி என பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். அதிக பாடல்களை பாடியதற்காக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். பத்மபூஷன் விருது பெற்றுள்ள பி.சுசீலா 5 தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.