தமிழ் திரையுலகை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற இயக்குனர்களில் ஒருவர் வெற்றி மாறன். பொல்லாதவன் படம் மூலமாக இயக்குனராக அறிமுகமான வெற்றி மாறன் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், விடுதலை என அவர் இயக்கிய அத்தனை படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களாக அமைந்தது.


வெற்றி மாறனுக்கு பிறந்தநாள்:


ஒவ்வொரு படமும் தவிர்க்க முடியாத படங்களாக அமைந்ததுடன் தேசிய மற்றும் சர்வதேச விருதுகளையும் குவித்துள்ளது. தனிச்சிறப்புகளுடன் தனித்துவமிக்க இயக்குனராக உலா வரும் வெற்றி மாறனுக்கு இன்று 49வது பிறந்தநாள் ஆகும்.


வெற்றி மாறனின் குருநாதர் மறைந்த இயக்குனரும், ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா. பாலுமகேந்திராவின் பட்டறையில் வளர்ந்தவன் என்பதை உணர்த்தும் விதமாக அவரது ஒவ்வொரு படமும் அமைந்துள்ளது. பாலு மகேந்திராவிற்கு பிடித்த சீடர்களில் ஒருவர் பாலு மகேந்திரா. வெற்றி மாறன் – ஆர்த்தியின் திருமணம் காதல் திருமணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

பாலு மகேந்திரா தந்த பாராட்டு:


வெற்றி மாறன் திருமண வாழ்க்கையில் இணைவதற்கு பாலு மகேந்திரா மிக மிக முக்கிய காரணம் ஆகும். வெற்றி மாறனுக்காக அவரது மனைவி ஆர்த்தியின் பெற்றோர்களிடம் பேசி திருமண சம்மதத்தையும் பெற்றுத்தந்தவர் பாலுமகேந்திரா.

ஆர்த்தியின் பெற்றோரிடம் என்ன சொன்னீர்கள்? என்று பாலுமகேந்திராவிடம் வெற்றி மாறன் கேட்டதற்கு, வெட்டியை ( வெற்றி மாறனை பாலு மகேந்திரா வெட்டி என்றுதான் கூப்பிடுவாராம்) எனக்கு 8 வருஷமா தெரியும். ஸ்மோக் பண்ணுவான். மத்த எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ஒருநாள் கூட அவன் மேல ஆல்கஹால் ஸ்மெல் வந்தது இல்ல. ஸ்பாட்ல எந்த பொண்ணுகிட்டயும் ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசி நான் பாத்தது இல்ல. 8 வருஷம்லா ஒருத்தனா நல்லவன நடிக்க முடியாது. கெரியர்லயும் அவனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.. நம்பி உங்க பொண்ணை கொடுக்கலாம். எங்க தேடுனாலும் இப்படி ஒரு பையன் கிடைக்க மாட்டான் என்று சொன்னதாக கூறியுள்ளார்.

காத்திருக்கும் படங்கள்:


பாலுமகேந்திராவின் ஆசிர்வாதம் பெற்ற சீடராக உலா வரும் வெற்றி மாறன் அவருக்கு பிறகு இயக்குனர் கதிரிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். மிகச்சிறந்த புத்தக வாசிப்பாளரான வெற்றி மாறன் ஏராளமான ஆங்கில நாவல்களை படிப்பது வழக்கம். இந்த புத்தக வாசிப்பு அதிகரிப்பதற்கும் பாலு மகேந்திரா முக்கிய காரணம் ஆகும்.


49வது பிறந்தநாளை இன்று கொண்டாடும் வெற்றி மாறன் தற்போது விடுதலை 2ம் பாக வேலையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மேலும், இவரது இயக்கத்தில் வாடிவாசல், வட சென்னை 2ம் பாகங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.