இன்று உலகம் போற்றும் அளவிற்கு தமிழ் திரையுலகம் வளர்ந்து நிற்கிறது. தொழில்நுட்பம், திரைக்கதை, பட்ஜெட் என பல விஷயங்களில் இந்திய திரையுலகத்தில் தமிழ் திரையுலகம் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்துள்ளது. இந்தளவிற்கு இன்று தமிழ் திரையுலகம் வளர்ந்து நிற்பதற்கு சினிமா தமிழ்நாட்டில் வளரத் தொடங்கிய காலத்தில் அதை சாமானியர்களுக்கு மனதிற்கு நெருக்கமான ஒன்றாக சரியான பாதையில் எடுத்துச் சென்ற இயக்குனர்களே பிரதான காரணம் என்று சொல்ல வேண்டும்.


பி.ஆர்.பந்தலு:


அந்த வகையில், தமிழ் சினிமாவில் காலத்தை கடந்து இன்றும் நிற்கும் படங்களை இயக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் பி.ஆர்.பந்தலு. 1950-60,70 காலகட்டத்தில் பிரம்மாண்ட இயக்குனராக உலா வந்தவர் பி.ஆர்.பந்தலு. 1910ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தின் வட ஆற்காட்டில் பிறந்தவர். இன்று ஆந்திரா மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் ஆகும். படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக தனது பணியைத் தொடங்கிய பி.ஆர்.பந்தலுவிற்கு, சினிமா மீதே தீராத மோகம் இருந்தது.


இதையடுத்து, 1936ம் ஆண்டு கன்னட படமொன்றில் சம்சார நௌகா என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படத்தில் நடித்தவர் முதன்முறையாக 1954ம் ஆண்டு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற படம் மூலமாக தயாரிப்பாளர் ஆவார். நடிகராகி 21 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இயக்குநராக அவதாரம் எடுத்தார்.


காலம் போற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன்:


1957ம் ஆண்டு சிவாஜியை கதாநாயகனாக வைத்து தங்கமலை ரகசியம் என்ற படத்தை இயக்கினார். அவரே தயாரித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் படம் தந்த வெற்றியால் அடுத்தடுத்து இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். 1958ம் ஆண்டு சபாஷ் மீனா என்ற படத்தை இயக்கினார். சிவாஜி கதாநாயகனாக நடித்த அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.


தமிழ் மட்டுமின்றி கன்னடம், இந்தியிலும் படத்தை தொடர்ந்து இயக்கிய பி.ஆர்.பந்தலு காலத்திற்கும் சிவாஜியை ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொண்டாடும் ப்ளாக்பஸ்டர் படத்தை 1959ம் ஆண்டு இயக்கினார். சிவாஜியை கதாநாயகனாக வைத்து சுதந்திர போராட்ட கதையை மையமாக வைத்து அவர் இயக்கிய படமே வீரபாண்டிய கட்டபொம்மன். அந்த படம் பெற்ற வெற்றி இந்தியா முழுவதும் தமிழ் சினிமாவின் புகழை பன்மடங்கு உயர்த்தியது.


கர்ணனை மறக்க முடியுமா?


இதையடுத்து, அவர் தெலுங்கு மற்றும் இந்தியிலும் மாறி, மாறி படங்களை இயக்கினார். வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றிக்கு பிறக குழந்தைகள் கண்ட குடியரசு என்ற படத்தை இயக்கிய பி.ஆர்.பந்தலு, சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி.யின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு கப்பலோட்டிய தமிழன் என்ற படத்தை இயக்கினார்.


வீரபாண்டிய கட்டபொம்மன் வெற்றிக்கு பிறகு 1964ம் ஆண்டு மீண்டும் சிவாஜியுடன் கூட்டணி சேர்ந்தார். இந்த முறை மகாபாரதத்தை கையில் எடுத்த பி.ஆர்.பந்தலு மீண்டும் தமிழ் சினிமா காலத்திற்கும் மறக்க முடியாத ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தந்தார். அந்த படமே கர்ணன் ஆகும்.


எம்.ஜி.ஆரின் ஆயிரத்தில் ஒருவன்:


சிவாஜியை வைத்து ப்ளாக்பஸ்டர் வெற்றிகளாக தந்த பி.ஆர்.பந்தலு, முதன்முறையாக எம்.ஜி.ஆருடன் கூட்டணி சேர்ந்தார். சிவாஜியின் ஆஸ்தான இயக்குனர் முதன்முறையாக எம்.ஜி.ஆருடன் கூட்டணி சேர்ந்தது அன்றைய தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த படமே ஆயிரத்தில் ஒருவன். 1965ம் ஆண்டு வெளியான இந்த படம் எம்.ஜி.ஆரின் திரை வாழக்கை வெற்றியில் தனி மகுடத்தை சூட்டியது.


மீண்டும் எம்.ஜி.ஆரை வைத்து நாடோடி என்ற வெற்றிப்படத்தை தந்தவர், எம்.ஜி.ஆரின் ஆஸ்தான கதாபாத்திரமான போலீஸ் கதாபாத்திரத்தை வைத்து ரகசிய போலீஸ் 115 என்ற ப்ளாக்பஸ்டர் வெற்றியைத் தந்தார். அன்றைய திரை உலகை கட்டி ஆண்ட எம்.ஜி.ஆர்., சிவாஜி இருவரின் திரை வாழ்க்கையிலும் மிகப்பெரிய ஏற்றத்தை தந்த ப்ளாக்பஸ்டர் இயக்கிய பி.ஆர்.பந்தலு 1974ம் ஆண்டு கடைசியாக கடவுள் மாமா என்ற படத்தை இயக்கினார்.


தமிழ், தெலுங்கு கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் மொத்தம் 57 படங்களை இயக்கி பிரம்மாண்ட இயக்குனராக உலா வந்த பி.ஆர்.பந்தலு 1974ம் ஆண்டு காலமானார். காலத்திற்கும் மறக்க முடியாத வெற்றிப்படங்களை இயக்கிய பி.ஆர்.பந்தலுவிற்கு இன்று 114வது பிறந்தநாள் ஆகும்.