தென்னிந்திய திரையுலகின் மிகவும் புகழ்பெற்ற பாடகர் பி.ஜெயச்சந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். கேரளாவைப் பூர்வீகமாக கொண்ட அவர் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலமானார். அவருக்கு வயது 80. ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு உள்ளிட்ட பல பாடல்களை அவர் தமிழில் பாடியுள்ளார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற பாடகர்:
பிரபல பாடகர் ஜெயச்சந்திரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி கன்னடம், இந்தியிலும் பாடல்களை பாடியுள்ளார். மிகப்பெரிய பாடகரான இவர் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். கேரள மாநிலத்தின் சிறந்த பாடகருக்கான விருதை 5 முறை வென்றுள்ளார். கேரள அரசின் ஜே.சி. டேனியல் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது வென்றுள்ளார். தமிழக அரசின் மாநில விருது மட்டும் 4 முறை பெற்றுள்ளார். இவரது மனைவி லலிதா. இவரது மகள் லட்சுமி, மகன் தினநந்தன்.
கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில் 1944ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி பிறந்தவர் ஜெயச்சந்திரன். சிறு வயது முதலே இசையை கற்றுத் தேர்ந்தார். மிருதங்கம், செண்டா வாசித்து கற்றுத் தேர்ந்துள்ளார். விலங்கியல் பட்டம் பெற்ற இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால், நிகழ்ச்சி ஒன்றில் இவரது பாடலைக் கேட்ட திரைப்பட தயாரிப்பாளர்கள் சோபனா பரமேஸ்வரன், வின்சென்ட் மலையாள சினிமாவில் பாட அழைத்துச் சென்றனர்.
தமிழில் எவர்கிரீன் ஹிட்:
1965ம் ஆண்டு சிதம்பரநாத் இசையில் ஒரு முல்லப்பூமலயுமாயி என்ற பாடலே இவர் பாடிய முதல் பாடல் ஆகும். ஆனால், அந்த பாடல் வெளியாக தாமதம் ஆகிய நிலையில் மஞ்சலையில் முங்கி தோர்த்தி பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதுதான் அதிகாரப்பூர்வமாக இவரது முதல் பாடல் ஆகும்.
தமிழில் எவர்கிரீன் ஹிட் அடித்த பல பாடல்கள் இவர் பாடியது ஆகும். தாலாட்டுதே வானம், கவிதை அரங்கேறும் நேரம், காளிதாசன் கண்ணதாசன், காத்திருந்து காத்திருந்து, இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே, பூவை எடுத்து ஒரு மாலை உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ளார்.
பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்:
அவரது மறைவிற்கு ஒட்டுமொத்த மலையாள திரையுலகமும் இரங்கல் தெரிவித்துள்ளது. பிரபல இசையமைப்பாளர்கள், முன்னணி நடிகர்கள் ஜெயச்சந்திரன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்டுகிறது. திரைப் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.