தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சிவாஜியின் நடிப்பை பின்பற்றி அடுத்தடுத்த தலைமுறையில் பல நடிகர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள். சிவாஜியின் சொந்த குடும்பத்தில் இருந்தே பல நடிகர்களாக சினிமாவில் இருந்து வருகிறார்கள்.
சிவாஜி கணேசனுக்கு இரு மகன்கள் உள்ளனர். ஒருவர் பிரபு மற்றொருவர் ராம்குமார். இதில் ராம்குமார் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் பல படங்களை தயாரித்துள்ளார். மற்றொரு மகனான பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து தற்போது பல குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ,கும்கி படத்தின் மூலம் நாயகனாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது சிவாஜி கணேசனின் மற்றொரு பேரனான தார்ஷன் கணேசன் சினிமாவில் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.
லெனின் பாண்டியன்
சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்து அறிமுக இயக்குநர் பாலச்சந்திரன் இயக்கும் லெனின் பாண்டியன் படத்தில் தார்ஷன் கணேசன் நாயகனாக நடித்துள்ளார். முன்னதாக பல்வேறு படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் தார்ஷன் நடித்துள்ளார். முறையாக நடிப்பு பயிற்சி பெற்ற தார்ஷன் மேடை நாகங்களில் நடித்துள்ளார். மாடலாகவும் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் பணியாற்றியிருக்கிறார். தனது முதல் படத்தில் வழக்கமான கமர்சியல் ரொமாண்டிக் கதையாக இல்லாமல் நல்ல கதையம்சம் உள்ள படமாக தேர்ந்தெடுத்துள்ளார் தார்ஷன். லெனின் பாண்டியன் படத்தில் அவரது கதாபாத்திரம் மற்றும் தோற்றம் படத்தின் மீது எதிர்பார்ப்பை அதிகபடுத்தும் விதமாக அமைந்துள்ளது.