ஒரு நடிகனுக்கு மிகவும் அவசியமான அம்சங்களாகக் கருதப்படும் அசாத்தியமான முகபாவனை, உணர்ச்சிகரமான நடிப்பு, பொருத்தமான உடல்மொழி, தெளிவான வசன உச்சரிப்பு என அனைத்தையும் ஒரே நேரத்தில் கொட்டித் தீர்த்து அதை அப்படியே பார்வையாளர்களுக்கு கடத்தும் அசாதரணமான நடிப்பு ஜாம்பவான்கள் பலரை, தமிழ் சினிமா கண்டுள்ளது. அதில் மிகவும் அற்புதமான ஒரு மகா கலைஞன் தான் நடிகர் நாகேஷ்!
எதிர்நீச்சல் போட்ட கலைஞன்!
நாடகங்களில் நடித்து வந்த கலைஞன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையால் அலைந்து திரிந்த காலக்கட்டத்தில் ஏராளமான அவமானங்களை சந்தித்த போதிலும், விடாமுயற்சியுடன் வாய்ப்பைத் தேடி தடைகளை தாண்டி, காலங்களைக் கடந்து வெற்றி நடை போட்ட நடிகர் நாகேஷின் 90ஆவது பிறந்தநாள் இன்று. ஒரு நகைச்சுவை நடிகர் என சிறு வட்டத்திற்குள் அடக்கிவிட முடியாத நடிப்பு சூறாவளி!
அசாத்திய திறமை
கேரக்டர் எவ்வளவு பெருசு என்பது முக்கியமில்லை, அதில் அவருடைய அபரிதமான பங்களிப்பு எத்தனை அற்புதமாக இருந்தது என்பது தான் முக்கியம். அப்படி தனக்கு கொடுக்கப்பட்டதை சிறப்பாக செய்து அனைவரையும் அசத்தும் திறமைசாலி. ஆரம்ப காலகட்டத்தில் நடிக்க வாய்ப்பு தேடிய காலம் மாறிப்போய் நாகேஷ் கால்ஷீட் தான் முதலில் வாங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போடும் அளவுக்கு பெருமை பெற்றவர். அவரின் கால்ஷீட் கிடைத்துவிட்டாலே படம் முக்கால்வாசி வெற்றி பெற்றுவிடும் என நம்பிக்கையை விதைத்தவர்!
நீர்க்குமிழி, எதிர்நீச்சல், எங்க வீட்டு பிள்ளை, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள், சர்வர் சுந்தரம், காதலிக்க நேரமில்லை, பாமா விஜயம், ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம், மைக்கேல் மதன காமராஜன் அவ்வை சண்முகி, நம்மவர், பஞ்ச தந்திரம் இப்படி அவரின் எண்ணில் அடங்கா படைப்புக்களை அடுக்கி கொண்டே போகலாம். நெகடிவ் ஷேட்டிலும் என்னால் கலக்க முடியும் என அபூர்வ சகோதர்கள் படம் மூலம் நிரூபித்தார். பிணத்தை போல கூட இத்தனை யதார்த்தமாக நடிக்க முடியுமா என அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியவர்.
அடைமொழியில் அடக்க முடியாதவர்!
அவர் நடித்த ஒவ்வொரு படத்திலும் தனக்கான முத்திரையை அழுத்தமாக பதிய வைக்கக்கூடியவர். நகைச்சுவை என்றால் அது நாகேஷ் தான் என சிம்மாசனம் போட்டு மக்களின் உள்ளங்களில் குடி கொண்ட இந்த மகா கலைஞனின் புகழை இந்த உலகம் உள்ள வரையில் மக்கள் கொண்டாடுவார்கள். நகைச்சுவைக்கு அடையாளமாய் இருந்த நாகேஷுக்கு ஏனோ அடைமொழி வைக்கப்படவில்லை என்பது சற்று வருத்தமான ஒரு விஷயம் தான். ஆனால் அவரை ஒரு அடைமொழிக்குள் அடக்கியும் விட முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை.
மக்களின் துன்பங்களை எல்லாம் மறக்கடித்து வாய்விட்டு சிரிக்க வைத்தவரால், அடுத்த நிமிடமே அழவைக்கவும் முடியும். அவரின் நடிப்பு அத்தனை ஆழமானது. சில நிமிடங்கள் மட்டுமே வந்து போனாலும் அப்படியே உலுக்கி விடும் ஆற்றல் கொண்டவர். இயக்குனர் சிகரம் எனக் கொண்டாடப்படும் கே. பாலச்சந்தரின் ஆஸ்தான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நாகேஷ்.
அன்றும் இன்றும் என்றும் போற்றத்தக்க நடிகர்களில் ஒருவராக திகழும் நகைச்சுவை ஜாம்பவான் நாகேஷ் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்!