பிரபல தொழிலதிபரான லெஜண்ட் சரவணன் தனது கடையின் விளம்பரத்தில் நடிக்க தொடங்கினார். இந்த விளம்பரத்தில் முன்னணி நடிகைகளான தமன்னா, ஹன்சிகா மோத்வானி ஆகியோருடன் சேர்ந்து ஆட்டம் போட்டிருந்தார். இதுதொடர்பான விளம்பர வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டன. பலரும் விமர்சித்த போதும் அதையெல்லாம் லெஜண்ட் சரவணன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து சினிமாவிலும் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார்.
நானும் இப்ப ஹீரோ தான்
தனது கடை விளம்பரத்திற்காகவே பல ஆடைகளை அணிந்து ஆட்டம் போட்ட லெஜண்ட் சரவனன், பில்லா 2 படத்தின் இயக்குனர்களான ஜெர்ரி & ஜெடி இயக்கத்தில் தி லெஜண்ட் படத்தில் நடிக்க தொடங்கினார். இப்படம் தமிழை தாண்டி பல மொழிகளிலும் வெளியானது. இப்படத்தில் தெலுங்கில் பாலையாவுடன் நடனம் ஆடிய ஊர்வசி ரவுத்தேலா ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாவிட்டாலும், லெஜண்ட் சரவணனுக்கு மகிழ்ச்சிதான். தமிழக மக்கள் தன்னையும் ஹீரோவாக ஏற்றுக்கொண்டதாக அவரே தெரிவித்தார்.
உண்மை சம்பவம்
இப்படத்தை தொடர்ந்து எதிர்நீச்சல், கொடி, பட்டாசு, கருடன் படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பது உறுதியானது. இப்படம் உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் இவருடன் நடிகை ஆண்ட்ரியா, சாம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் பாயல் ராஜ்புத் ஹீரோயினாக நடிப்பது உறுதியாகியுள்ளது. இவர், தெலுங்கில் வெளியான RX 100 படத்தின் மூலம் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீபாவளிக்கு ரிலீஸ்
பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இதுகுறித்த அப்டேட் ஒன்றை லெஜண்ட் சரவணன் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தீபாவளி வெளியீட்டை நோக்கி இறுதி கட்ட படப்பிடிப்பு என பதிவிட்டுள்ளார். மேலும், தனது உறவினரின் திருமணத்தில் கலந்துகொண்ட லெஜண்ட் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகளும் நல்லபடியாக நடந்து வருகிறது. தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கிறோம் என தெரிவித்தார்.
மாஸான டைட்டிலோடு வருவோம்
மேலும், இன்றைய டிரெண்டுக்கு ஏற்றவாறு மாஸ், ஆக்சன், த்ரில்லர் ஜானரில் படம் வெளியாகும். படத்தின் டைட்டிலும் மாஸாக இருக்கும். இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக அனைவரது தீபாவளியாக இருக்கும் என்றும் படம் குறித்த முக்கிய தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.